×

குற்றப்பத்திரிகையில் போலி கையெழுத்து எஸ்எஸ்ஐக்கு 3 மாதம் சிறை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குடும்ப பிரச்னை தொடர்பாக, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஐக்கிய அரபிய நாடுகளில் பணியாற்றும் திருவாரூரை சேர்ந்த பன்னீர்செல்வம் பிரதீபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வலங்கைமான் காவல் நிலையத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த வலங்கைமான் போலீசார், பன்னீர்செல்வம் பிரதீபனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.

இந்த நோட்டீசை எதிர்த்து பன்னீர்செல்வம் பிரதீபன் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தடை உத்தரவை மீறி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் வலங்கைமான் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு எதிராக நீதிபதி வேல்முருகன், தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகி இருந்த காவல் கண்காணிப்பாளர், இந்த விவகாரம் குறித்த விசாரணையில் வலங்கைமான் காவல் ஆய்வாளராக இருந்த ரங்கராஜன் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அவரது கையெழுத்தை சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த சங்கர் மோசடியாக போட்டு குற்ற பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக விளக்கம் அளித்தார்.

இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கரை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகி இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர், ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக தெரிவித்தார். ஆனால் குற்றப்பத்திரிகையில் ஆய்வாளரின் கையெழுத்தை ஏன் போட வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இது மோசடி செயல் என தெரிவித்து, சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கருக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Tags : High Court ,SSI ,Chennai ,Panneerselvam Pradeepan ,Thiruvarur ,United Arab Emirates ,Court ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...