உனா: விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான் என்று பாஜ எம்.பி அனுராக் தாக்குர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சல் மாநிலத்தில் உள்ள உனா நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் சர்வதேச விண்வெளி தினத்தை முன்னிட்டு மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய அமைச்சரும், பா.ஜ எம்பியுமான அனுராக் தாக்கூர் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் விண்வெளிக்கு முதலில் சென்றது யார் என்று கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு ‘நீல் ஆம்ஸ்ட்ராங்’ என மாணவர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் பதில் சொல்ல,’நான் அனுமன் என உணர்கிறேன்’ என அனுராக் தாக்குர் தெரிவித்தார்.
அதுதான் இப்போது சர்ச்சையாக மாறி உள்ளது. அங்கு அனுராக் தாக்கூர் பேசும் போது, ‘ விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் என நான் உணர்கிறேன். இது ஆயிரம் ஆண்டுகள் பழமையான நமது பாரம்பரியம், அறிவு, கலாச்சாரம் என முக்கியமானவற்றை காட்டுகிறது. இது நமக்கு தெரியவில்லை என்றால் பிரிட்டிஷ்காரர்கள் போதித்த பாடத்தோடு நாம் நின்று விடுவோம். பாட புத்தகத்தை கடந்து நமது அறிவை விரிவு செய்ய வேண்டும். இதை நான் பள்ளியின் முதல்வர் உட்பட அனைவரிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன். நமது தேசம், நமது மரபுகள், நமது அறிவு ஆகியவற்றைப் பாருங்கள் உள்ளிட்டவற்றை கவனியுங்கள். நீங்கள் அந்த திசையில் இருந்து பார்த்தால், உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியவரும்’ என்றார்.
* விண்வெளிக்கு முதன்முதலில் பயணம் மேற்கொண்டவர் என்ற பெருமையை ரஷ்யாவை சேர்ந்த யூரி ககாரின் பெற்றுள்ளார். கடந்த 1961ல் அவர் பயணம் மேற்கொண்டார்.
* 1969 ஆம் ஆண்டு நிலவில் தரையிறங்கினார் அமெரிக்காவை சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங்.
* வானியலை விட ஜோதிடத்திற்கு முன்னுரிமை அளிப்பதா? அகிலேஷ்யாதவ் ஆவேசம்
அனுராக் தாக்கூர் கருத்துக்கு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,’ பாஜவினர் பாடப்புத்தகங்களில் இருக்கும் வானியலை ஜோதிடம் மூலம் முறியடிக்க முயற்சி செய்கிறார்கள். அதனால் தான் விண்வெளிக்குச் சென்ற முதல் நபர் அனுமான் என்று அவர்கள் கூறுகிறார்கள். கடவுள் விண்வெளியில் வாழ்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் பாஜ தலைவர்கள் வானியலை விட ஜோதிடத்தை அதிகம் நம்புகிறார்கள். எந்த நாள் நல்ல நாள், எந்த நிறத்தை அணிய வேண்டும், அல்லது வெளியேற சரியான நேரம் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். வானியலில் நம்பிக்கை இல்லாதவர்கள் எப்படி விண்வெளி பற்றிப் பேச முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார்.
