×

கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்ட சென்னை இதழியல் நிறுவனத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்: முதலாமாண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்

சென்னை: இதழியல் துறையில் ஆர்வமுள்ள இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் நோக்குடனும், தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, ஊடகக் கல்வியை வழங்குவதற்காகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு குறைந்த கட்டணத்தில், ஓர் ஆண்டு இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பை வழங்குவதற்காகவும் சென்னை, கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக ரூ.7.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பு இந்த கல்வியாண்டு முதல் (2025 – 26) தொடங்கப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழியிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.
அச்சு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்களில் பணிபுரிவதற்கான திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளது. சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை கோட்டூர்புரத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மாணவ, மாணவியர்களிடம் முதல்வர் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில், தி.க.தலைவர் கி. வீரமணி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், செய்தித் துறை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், துணை மேயர் மு.மகேஷ் குமார், செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், இதழியல் நிறுவன சிறப்பு பணி அலுவலர் எஸ்.ஏ.ராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Chennai Institute of Journalism ,Kotturpuram ,Chennai ,Tamil Nadu, Chennai ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...