ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெய்த கனமழையால் பெரும்பகுதி நிலம் உள்வாங்கி ஒரு கிராமம் அருவிபோல் மாறி இருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் இது தொடர்ந்து நடப்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்துபோய் இருக்கின்றனர். நிலம் உள்வாங்கிய காட்சிகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டும் வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது சவாய் மாதோபூர் என்ற மாவட்டம் இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வரும் சூழலில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மக்களின் இயல்பு வாழ்கையை முடக்கி இருக்கிறது. சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் வெள்ள நீரில் மூழ்கியாதல் பல பகுதிகளிலும் போக்குவரத்துக்கு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீரில் மூழ்கிய காரில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாக சொல்லப்படும் நிலையில், சரோவர் அணை பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போனதாகவும் தெரிகிறது. வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்பதில் தேசிய பேரிடர் மீட்பு படையுடன் இணைந்து மாநில பேரிடர் மீட்பு படை குழுவும், ராணுவமும் மும்முரம் காட்டி வருகின்றன. மீட்பு மட்டும் நிவாரண பணிகள் தொடரும் சூழலில் பொதுமக்கள் ஆற்றங்கரைகள் மட்டும் தாழ்வான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையமும் தெரிவித்து இருக்கிறது. இந்தநிலையில், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நிலம் உள்வாங்கி பெரிய பள்ளங்கள் ஏற்பட தொடங்கி உள்ளன. குறிப்பாக சுருவில் என்ற கிராமத்தின் கொட்டி தீர்த்த கனமழையால் முதலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது நிலத்தின் பிடிமான தன்மையை இலகுவாக்கியத்தில் நிலம் முற்றிலுமாக கீழே இறங்கியது. இதனால் கிராமத்தின் பெரும்பகுதி மண்ணுக்குள் போனது. மேடான பகுதி மண்ணுக்குள் போனதால் வெள்ள நீர் அங்கு அருவிபோல் கொட்டி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.
