* பயனாளர்களின் விவரங்களில் தில்லுமுல்லு
* போலி வங்கி கணக்குகள், தவறான புகைப்படங்கள், மூடப்பட்ட பயிற்சி மையங்கள்…
புதுடெல்லி: இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அளிக்கும் பிரதமர் பெயரிலான ரூ.14,450 கோடி திட்டத்தில் மெகா மோசடி நடந்திருப்பது சிஏஜி அறிக்கை மூலம் அம்பலமாகி உள்ளது. இதில் பயனாளிகளின் விவரங்களில் பல தில்லுமுல்லுகள் நடந்திருப்பதும். போலி வங்கி கணக்குகள், தவறான புகைப்படங்கள், மூடப்பட்ட பயிற்சி மையங்கள் என பல முறைகேடுகள் நடத்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் வரலாறு காணாத அளவுக்கு தலைவிரித்தாடும் நிலையில், இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கி அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், ஒன்றிய அரசு கடந்த 2015ம் ஆண்டு பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா (பிஎம்கேவிஒய்) எனும் இளைஞர் திறன் மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம் 1 கோடி இளைஞர்களின் திறனை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் இதுவரை 4 கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் எலக்ட்ரானிக்ஸ், ஆடை, ஜவுளி, கட்டுமானம், சுற்றுலா, விருந்தோம்பல் உள்ளிட்ட துறைகள் மட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக்ஸ், டிரோன் இயக்குதல் போன்ற நவீன தொழில்துறைகளிலும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பயிற்சி மையங்கள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு இதுவரை ரூ.14,450 கோடி வரையிலும் செலவிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களை ஊக்கப்படுத்த பயிற்சியின் நிறைவாக ரூ.500 முதல் ரூ.8,000 வரையிலும் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒவ்வொரு இளைஞர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்கான செலவை அரசே சம்மந்தப்பட்ட பயிற்சி நிறுவனங்களுக்கு வழங்கி விடும். இதற்காக பயிற்சியில் சேரும் அனைவரிடமும் வங்கி கணக்கு பெறப்பட்டு நேரடியாக அதில் பணம் பட்டுவாடா செய்யப்படும்.
இந்நிலையில், இத்திட்டத்தின் முதல் 3 கட்டங்கள் தொடர்பாக இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை மக்களவையில் கடந்த 2 நாட்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் அம்பலமாகி உள்ளன. முதல் 3 கட்ட பிஎம்கேவிஒய் திட்டத்தில் நாடு முழுவதும் 1.1 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஸ்கில் இந்தியா இணையதளத்தில் பயிற்சி பெற்ற இளைஞர்களின் பதிவு செய்யப்பட்ட விவரங்களில் பல்வேறு தில்லுமுல்லு இருப்பதை சிஏஜி கண்டறிந்துள்ளது. குறிப்பாக வங்கி கணக்கு எண்கள், இமெயில் முகவரிகள், தொடர்பு விவரங்கள் பெரும்பாலும் தவறானவையாக இருப்பதாக சிஏஜி தெரிவித்துள்ளது. பிஎம்கேவிஒய் 2.0 மற்றும் 3.0 தொடர்பான தரவுகளை ஆய்வு செய்ததில், மொத்தம் 95,90,801 பயிற்சி பெற்றவர்களில் 90,66,264 பேரின், அதாவது 94.53 சதவீதத்தினரின் வங்கி கணக்கு விவரங்கள் பூஜ்ஜியமாகவும், பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது அல்லது வங்கி கணக்கு எண்கள் தரப்படவே இல்லை.
மீதமுள்ள 5,24,537 விண்ணப்பதாரர்களில், 12,122 பேருக்கு தனித்தனி வங்கி கணக்குகளும், 52,381 பேருக்கு ஒரே வங்கி கணக்கு எண் 2 அல்லது அதற்கு மேற்பட்ட முறை பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் சிஏஜி தெரிவித்துள்ளது. இது குறித்து சிஏஜி அறிக்கையில், ‘சில வங்கி கணக்குகள் 111111111 என்றும், 123456… என்றும் உள்ளது. எந்த ஒரு வங்கி கணக்குகள் இப்படிப்பட்ட வரிசையான எண்களுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை’ என கூறப்பட்டுள்ளது.
மேலும், 36.51 சதவீதம் பேரின் இமெயில் முகவரிகள் போலியானவை. இவர்களுக்கு அனுப்பப்பட்ட இமெயில்களுக்கு 171 பேரிடம் இருந்து மட்டுமே பதில் கிடைத்ததாக சிஏஜி அறிக்கை கூறி உள்ளது. அதிலும், 131 பதில் இமெயில்கள் ஒரே ஐடியில் இருந்து வந்துள்ளது அல்லது பயிற்சி மையங்களின் ஐடியிலிருந்து வந்துள்ளன.
பயிற்சி மையங்களை நேரில் ஆய்வு செய்ததில் பல பயிற்சி மையங்கள் செயல்படாமல் மூடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. பீகாரில் 3 பயிற்சி மையங்கள் மூடப்பட்ட நிலையிலேயே, பலருக்கு பயிற்சி அளித்ததாக இத்திட்டத்திலிருந்து நிதியை பெற்றுள்ளன. பயிற்சி மையங்களின் தொலைபேசி எண்களும் பல போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பல பயனாளிகளுக்கு ஒரே புகைப்படங்கள் வழங்கப்பட்டதால், பயிற்சி நடத்தப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்களிலும் குளறுபடி இருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்து கொண்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
மொத்த நிதி
ஒதுக்கீடு
ரூ.14,450
கோடி
பயிற்சி
பெற்றவர்கள்
1.1
கோடி பேர்
ஊக்கத்தொகை
ரூ.500-8,000
முறைகேடு நடந்தது எப்படி?
* பயிற்சி முடித்து சான்றிதழ் பெறுபவர்களின் வங்கி கணக்குகளில் ஊக்கத்தொகை நேரடியாக வரவு வைக்கப்படும். ஆனால் பலரது வங்கி கணக்கு எண்கள் போலியாகவும், வங்கி கணக்கு விவரங்களே இல்லாததாகவும் இருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* பயிற்சி பெற்றவர்களின் புகைப்படங்கள் என ஒரே நபரின் புகைப்படங்கள் பல பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
* இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்குவதாக கூறி, அதற்கான நிதியை ஒன்றிய அரசிடம் இருந்து பெறும் சில பயிற்சி மையங்கள் மூடப்பட்ட நிலையில் உள்ளது.
* பயிற்சி பெற்றவர்கள் பலர் வழங்கிய அவர்களின் இமெயில் உள்ளிட்ட தொடர்பு தகவல்களும் போலியானவை. பல தொடர்பு தகவல்கள் பயிற்சி மையத்திற்கானதாக இருப்பதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது.
* யாருக்கு போகிறது பணம்?
சிஏஜி அறிக்கையில், 2023ம் ஆண்டில் மொத்தம் 24.53 லட்சம் பயிற்சி பெற்றவர்களுக்கு (25.58 சதவீதம்) மட்டுமே ஊக்கத்தொகை வங்கி கணக்கில் நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதில் 17.69 லட்சம் பேருக்கு (18.44 சதவீதம்) மட்டுமே வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 2024ல் ஒன்றிய திறன் மேம்பாட்டு அமைச்சகம் அளித்த அறிக்கையின்படி, 95.91 லட்சம் பயிற்சி பெற்றவர்களில், 61.14 லட்சம் பேருக்கு (63.75 சதவீதம்) நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் ஊக்கத்தொகை செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 34 லட்சம் பேருக்கு பணம் செலுத்தப்படவில்லை. அவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்த தகவலையும் அமைச்சகம் தெரிவிக்கவில்லை.
