அராரியா: ‘‘பீகாரில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருவதால், தேர்தல் முடிவு சாதகமானதாக இருக்கும்’’ என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்வதை கண்டித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 16 நாள் வாக்காளர் அதிகார யாத்திரையில் ஈடுபட்டுள்ளார்.
யாத்திரைக்கு நடுவே அராரியாவில் நேற்று ராகுல் காந்தி, ஆர்ஜேடி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான பொது தேர்தல் அறிக்கையை இந்தியா கூட்டணி விரைவில் வெளியிடும். இந்தியா கூட்டணியின் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக செயல்படுகின்றன. நாங்கள் அனைவரும் சித்தாந்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இணைந்திருக்கிறோம்.
ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மதிக்கிறோம். எனவே தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதாகமாக இருக்கும். பீகாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமானது வாக்குகளை திருடி பாஜவுக்கு உதவுவதற்காக தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் முயற்சி. வாக்குகளைத் திருட தேர்தல் ஆணையத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பாஜவுக்காக தேர்தல் ஆணையம் பாடுபடுவது முற்றிலும் அம்பலமாகி உள்ளது.
அரியானா, மகாராஷ்டிரா, கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதில் நடந்த முறைகேடுகள், போலி வாக்காளர்கள் எப்படி சேர்க்கப்பட்டனர் என்பது குறித்து நான் தேர்தல் ஆணையத்தை அம்பலப்படுத்திய போது, இதுதொடர்பாக என்னிடம் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் கேட்கிறது. அதுவே ஆளுங்கட்சியை சேர்ந்த அனுராக் தாக்கூர் என்னைப் போலவே குற்றம்சாட்டிய போது எந்த பிரமாண பத்திரத்தையும் அவரிடம் தேர்தல் ஆணையம் கேட்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த பாரபட்சமான நடத்தை மாற வேண்டும்.
பீகாரில் நடைபெறும் வாக்காளர் அதிகார யாத்திரை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மக்கள் பெருமளவில் இணைகின்றனர். கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளோம். அவர்கள் எங்களுடன் தாங்களாகவே இணைந்துள்ளனர். பீகாரில் தேர்தல் ஆணையம் மக்களின் வாக்குகளைத் திருடுகிறது என்பதை இது வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. சிறு குழந்தைகள் கூட இப்போது வாக்கு திருட்டு, அதிகார திருட்டு என முழக்கத்தை எழுப்புவதால் எங்கள் யாத்திரையின் தாக்கத்தை கற்பனை செய்து பார்க்கலாம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
* திருமணம் குறித்து ராகுல் நகைச்சுவை
செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் குறித்து பேசிய ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், ‘‘மூத்த சகோதரனாக கருதும் சிராக் பஸ்வான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது மட்டும்தான் எனது அறிவுரை. இதுதான் சரியான நேரம்’’ என்றார். அதற்கு அருகிலிருந்த ராகுல் காந்தி, ‘‘இந்த அறிவுரை எனக்கும் பொருந்தும். தேஜஸ்வியின் தந்தையிடம் (லாலு பிரசாத்) இதைப் பற்றி பேச்சு நடக்கிறது’’ என்றார். இதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.
* பைக் ஓட்டிச் சென்ற ராகுல்
பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் உள்ள அராரியாவில் நேற்று வாக்காளர் அதிகார யாத்திரையில் ராகுல் காந்தி மக்களோடு மக்களாக பைக் ஓட்டிச் சென்றார். அவருடன் தேஜஸ்வி யாதவ்வும் மற்றொரு பைக்கை ஓட்டினார். இரு தலைவர்களின் பைக்கிற்கு பின்னால் ஏராளமான கட்சி தொண்டர்கள், இளைஞர்கள் ஓடினர். ராகுல் பைக்கில் செல்வதை காண மக்கள் தெருக்களில் வரிசைகட்டி நின்றனர்.
