சென்னை: மருத்துவ சேவை வழங்குவதிலும் மக்களின் உடல்நலனைக் காப்பதிலும் தமிழ்நாடுதான் ‘நம்பர் 1’ என உறுதிசெய்வோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2ம் தேதி சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் பங்குகொள்ளும் பயனாளர்களுக்கு பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், மன நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், நுரையீரல் மருத்துவம் ஆகிய மருத்துவச் சேவைகள் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களை கொண்டு வழங்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட பரிசோதனைகள் மட்டுமின்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: ஆகஸ்ட் 2 தொடங்கி, சனிக்கிழமைதோறும் நடைபெற்று வரும் முகாம்களில் இதுவரை 3 வாரங்கள் நிறைவுற்றுள்ளன.
முதல் வாரம் ஆகஸ்ட் 2 ம் தேதி 44,795 மருத்துவப் பயனாளிகள், இரண்டாம் வாரம் ஆகஸ்ட் 9ம் தேதி 48,046 மருத்துவப் பயனாளிகள், மூன்றாம் வாரம் ஆகஸ்ட் 23ம் தேதி 56,245 மருத்துவப் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். மருத்துவ சேவை வழங்குவதிலும் மக்களின் உடல்நலனைக் காப்பதிலும் தமிழ்நாடுதான் ‘நம்பர் 1’ என உறுதிசெய்வோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.
