×

செப்.3ம்தேதி திருச்சி வருகை திருவாரூர் பல்கலை விழாவில் ஜனாதிபதி முர்மு பங்கேற்பு: ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம்

திருச்சி: செப்.3ம் தேதி திருச்சி வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். மேலும், ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்கிறார். திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 3,000 மாணவர்கள் 64 பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர்.

இந்த பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 3ம்தேதி காலை நடைபெற உள்ளது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 3ம்தேதி காலை டெல்லியில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ெஹலிபேடில் பகல் 12.30 மணியளவில் வந்து இறங்குகிறார்.

அங்கு மதிய உணவிற்கு பின்னர் 2.30 மணி முதல் 3.30 மணி வரை நடை பெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி, மத்திய பல்கலைக்கழகங்கள் அளவில் கோல்டு மெடல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் புறப்பட்டு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்கு அமைக்கப்படும் பிரத்யேக ஹெலிபேடு தளத்தில் இறங்குகிறார்.

பின்னர் காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் காரில் திருச்சி விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதியின் திருச்சி மற்றும் திருவாரூர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : President ,Murmu ,Trichy ,Tiruvarur Central University ,Srirangam temple ,Draupadi Murmu ,Tamil Nadu Central University ,Neelakudi, Tiruvarur district ,Tamil Nadu ,Kerala, ,Odisha ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...