சென்னை: காற்றின் வேகமாறுபாடு காரணமாக, சென்னையில் நேற்று விடிய, விடிய மழை பெய்தது. சோழிங்கநல்லூர், பாரிமுனையில் 17 சென்டி மீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அதே நேரத்தில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் நேற்று முன்தினம் லேசான மழை பெய்தது. அதுமட்டுமல்லாமல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை கனமழை வெளுத்து வாங்கியது.
சென்னை சென்ட்ரல், கோயம்பேடு, எழும்பூர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, விருகம்பாக்கம், வடபழனி, அசோக் பில்லர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழையால் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், காலை நேரத்தில் வேலைக்கு சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் சென்னை முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
இந்நிலையில் இன்று முதல் 29ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி செந்தாமரை கண்ணன் கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் 25ம் தேதி (நாளை) வாக்கில், ஒடிசா, மேற்குவங்காள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.
இதனால் இன்று முதல் 29ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதுமட்டுமல்லாமல் இன்று வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஒடிசா-மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லூர், பாரிமுனையில் 17 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மடிப்பாக்கம் 15 செ.மீ, எண்ணூர், ஆற்காடு, கொரட்டூர், நெற்குன்றத்தில் 14 செ.மீ, சோழவரம், திருத்தணியில் 13 செ.மீ, திருவள்ளூர், அம்பத்தூர், செம்பரம்பாக்கம், வளசரவாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம் 11 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* 29 ஆண்டுக்கு பிறகு சென்னையில் மூன்று நாள் தொடர் கனமழை
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 29 ஆண்டுகளுக்குப் பின் தென்மேற்கு பருவ காலத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் கனமழை பெய்திருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கடந்த 1996ம் ஆண்டு புயல் சின்னம் உருவாகி கனமழை பெய்த போது தான், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கனமழை பெய்துள்ளது. அதன்பிறகு தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்தடுத்து கனமழை பதிவாகி இருக்கிறது.
இந்த மாவட்டங்களில் இன்று (நேற்று) மழைக்கான வாய்ப்பு குறைவுதான். ஆனால் மழை விருந்தில் வேறு சில மாவட்டங்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் எப்போதெல்லாம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறதோ, அப்போது, மாநிலத்தின் மற்ற இடங்கள் அமைதியாக இருக்கும். இப்போது, சென்னையுடன் ராணிப்பேட்டையும் சேர்ந்து கொண்டுள்ளது. தொடர்ந்து சதமடித்திருக்கிறது மழைப் பதிவு. மேலும் சில மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
