×

மேட்டுப்பாளையம், சிறுமுகையில் புலம்பெயர் தொழிலாளர்களை கண்காணிக்கும் பணி தீவிரம்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, அன்னூர், பில்லூர் அணை உள்ளிட்ட காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சிறியது முதல் பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், பவுண்டரிகள், மில்கள், நூற்பாலைகள், தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்த நிறுவனங்களில் சமீபகாலமாக புலம்பெயர் தொழிலாளர்கள் எனப்படும் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே இருப்பிட வசதியையும் செய்து கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் சமீப நாட்களாக புலம்பெயர் தொழிலாளர்கள் இடையே தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. மேலும்,இந்த தொழிலாளர்களில் சிலர் சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறியது முதல் பெரியது வரையிலான நிறுவனங்கள், மில்கள், பவுண்டரிகள், நூற்பாலைகள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பணியில் சேரும் வட மாநில தொழிலாளர்களின் அடையாள அட்டை,ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள சான்றிதழ்கள் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள் பெற்று பணியில் சேர்க்க வேண்டும்.

ஒப்பந்ததாரர்கள் மூலமாக அழைத்து வந்தாலும் புலம்பெயர் தொழிலாளர்களின் முழு விவரங்கள் பெற்ற பின்னரே பணியில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.அவர்களை போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் டிஎஸ்பி அதியமான் கூறியதாவது:

மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் நூற்பாலைகள், தொழிற்சாலைகள், பவுண்டரிகள், மில்கள், தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களின் நிர்வாகத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்களை பணியில் சேர்க்கும் பொழுது அவர்களின் அடையாளம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள் பெற்ற பின்னரே அனுமதிக்க வேண்டும்.

அவ்வாறு பணியில் சேரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் மூலமாக பணிக்கு அழைத்து வரப்பட்டாலும் அவர்களிடமும் விபரங்கள் அனைத்தையும் பெற்ற பின்னரே பணியில் சேர்க்க வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவ்வப்போது இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் மூலம் அவ்வப்போது அதிரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு ஆய்வு மேற்கொள்ளும் போது அவர்கள் கஞ்சா,குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களின் புழக்கம் அதிகளவில் இருப்பதும்,அவர்கள் அதனை அதிகளவில் பயன்படுத்தி வருவதும் தெரிய வந்துள்ளது. இதனால் அதனை பயன்படுத்துபவரிடம் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பொருட்கள் எவ்வாறு கிடைக்கிறது? எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது? என்பது உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்பட்டு சம்பந்தபட்டவர்களை கைது செய்து வருகிறோம்.

அனைத்து ஸ்டேஷன்களுக்கும் இதுபோன்ற பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் மூலமாக இந்த நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கி உள்ள அறைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல் வங்கதேச நபர்கள் சட்ட விரோதமாக போலி ஆவணங்கள் மூலமாக இங்கு தங்கியுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்களின் கைரேகை உள்ளிட்ட தடயங்களை பழைய குற்றவாளிகள் கைரேகையோடு ஒப்பிட்டு பார்த்து அது மேட்ச் ஆகிறதா? என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனரா? என்பது குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கண்காணிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட பொருட்களின் புழக்கம் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Mettupalayam ,Sirumugai ,Karamadai ,Annur ,Billur Dam ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...