ஈரோடு, ஆக. 23: ஈரோடு அடுத்த வெள்ளோடு பகுதியில் கந்தசாமி என்பவர், இரும்பு கிரில் மற்றும் மேற்கூரை அமைக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை கடையின் ஷட்டரை இறக்கிவிட்டு, வெளி வேலைகளுக்கு சென்று விட்டார். பின்னர் கடைக்கு திரும்ப வந்து பார்த்தபோது, கடையில் இருந்த இரும்பு கம்பிகள், கேபிள் ஒயர்கள் என ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் மாயமாகி இருந்தது.
கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிவப்பு நிற சர்ட் அணிந்த மர்மநபர் ஒருவர் கடையின் ஷட்டரை திறந்து உள்ளே வருவதும், பின்னர் கடைக்குள் இருந்த பொருட்களை திருடிச்செல்வதும் தெரியவந்தது. இதேநபர் கவுண்டச்சிப்பாளையத்தில் மளிகை கடை உரிமையாளரான ரமேஷ் என்பவரது ஆட்டோ பேட்டரியை திருடிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக வெள்ளோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
