×

கருத்தடை செய்த பிறகு பிடித்த இடத்திலேயே விட்டுவிட வேண்டும்: நாடு முழுவதும் பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெரு நாய்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. நாய் கடி காரணமாக ராபிஸ் நோய் தாக்கத்தினால் உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் டெல்லி, ராஜஸ்தான், உள்ளிட்ட மாநிலங்களில் தெருநாய்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றமும், பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களும் சமீபத்தில் உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.

இதனை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 11ம் தேதி உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தெரு நாய் மற்றும் விலங்கின ஆதரவு அமைப்பினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். இதையடுத்து இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வுக்கு மாற்றி அமைத்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்திப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 13ம் தேதி விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் விகரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் வழங்கிய உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தை முழுமையாக ஆராய்ந்தோம். இதையடுத்து தான் தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம். இது டெல்லிக்கு மட்டும் கிடையாது.

நாடு முழுவதற்கும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த ஆணை பொருந்தும். குறிப்பாக தெரு நாய்களை பிடிக்க வேண்டும் முன்னதாக பிறப்பித்த உத்தரவில் நாங்கள் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. ஆனால் கருத்தடை ஆபரேஷன் செய்த பிறகு தெரு நாய்களை எங்கிருந்து பிடித்தார்களோ அந்த பகுதியிலேயே விட்டுவிட வேண்டும். வெறிநாய்க்கடி அல்லது ஆக்ரோஷமான நடத்தை கொண்ட நாய்களை மட்டும் விடுவிக்கக்கூடாது. பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிக்க கண்டிப்பாக அனுமதி கிடையாது. அதற்கு முழுமையாக தடை விதிக்கிறோம்.

குறிப்பாக குடற்புழு நீக்கம், தடுப்பூசி ஆகிய விவகாரங்களை மேற்கொண்டு அந்த நாய்களால் பிரச்சனை இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகு, நாய்களை பிடித்த இடத்தில் விடலாம். தெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரத்யேக இடங்கள் உருவாக்கப்படும். குறிப்பாக தெருவோர நாய்களுக்கு உணவளிக்க கூடியவர்கள் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் தான் உணவளிக்க வேண்டுமே தவிர கண்ட இடங்களில் உணவுகளை போடக்கூடாது.

அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களிலும் தெரு நாய் விவகாரம் தொடர்பான நிலுவையில் இருக்கும் வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது. மிகவும் ஆக்ரோஷமாகவும், ராபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாய்களை பிடிக்கப்பட்ட பொதுப்பகுதியில் மீண்டும் விடக்கூடாது. அவற்றை காப்பகங்களில் மட்டுமே தனியாக வைத்திருக்க வேண்டும்.

தெரு நாய்கள் விவகாரத்தை எவ்வாறு கையாள்வது, இதற்கென்று எத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது, இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் விரிவான விளக்கங்கள் கொண்ட பிரமாணப்பத்திரத்தை எட்டு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.

இதில் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த இடைக்கால உத்தரவுக்கு எதிராக யாரேனும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர நினைத்தால் தனிநபராக இருந்தால் ரூபாய் 25 ஆயிரமும், அதேப்போன்று என்.ஜி.ஓவாக இருந்தால் ரூபாய்.2 லட்சமும் டெபாசிட் தொகையாக உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி விட்டு மனுவை தாக்கல் செய்து வழக்கை நடத்திக் கொள்ளலாம். இந்த தெரு நாய்கள் விவகாரத்தை பொருத்தமட்டில் மாநகராட்சி அதிகாரிகள் தான் முழு பொறுப்பை ஏற்க வேண்டும். அவர்களை அரசுகள் கண்காகாணிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை எட்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

* தெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரத்யேக இடங்கள் உருவாக்கப்படும்.

* கருத்தடை ஆபரேஷன் செய்த பிறகு தெரு நாய்களை எங்கிருந்து பிடித்தார்களோ அந்த பகுதியிலேயே விட்டுவிட வேண்டும்.

* ரேபீஸ் பாதித்த அல்லது ஆக்ரோஷமான நடத்தை கொண்ட நாய்களை மட்டும் விடுவிக்கக்கூடாது.

* பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிக்க கண்டிப்பாக அனுமதி கிடையாது.

* நாடு முழுவதற்கும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த ஆணை பொருந்தும்.

Tags : Supreme Court ,New Delhi ,Delhi ,Rajasthan ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்