×

ராஜஸ்தானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: கார் அடித்துச்செல்லப்பட்டதில் ஒருவர் பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நேற்று பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார் ஒன்று அடித்துச்செல்லப்பட்டது. இதில் காரில் இருந்த இளைஞர் உயிரிழந்தார். ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஏராளமான குடியிருப்புக்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. போக்குவரத்து தடைபட்டுள்ளது. அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சுர்வால் அணையில் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் படகு கவிழ்ந்ததில் 10 பேர் நீரில் மூழ்கினார்கள். இதில் மூன்று பேர் மீட்கப்பட்டனர். மேலும் மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகின்றது. அஜ்மீரில் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடியபோது அணையில் குளித்த ஒருவர் நீரில் மூழ்கி பலியானார்.

ஜெய்ப்பூரில் சக்சு பகுதியில் பைக்கில் சென்ற தம்பதியின் ஆற்றுவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். கணவர் மீட்கப்பட்ட நிலையில் மனைவி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மழையின் காரணமாக குஷாலிதர்ராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 552ல் பயங்கர வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது நிவாயிலில் இருந்து இந்தூர் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சாலையில் திடீரென ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கிய கார் அடித்துச்செல்லப்பட்டது.
இந்த சம்பவத்தில் காரில் இருந்த இந்தூரை சேர்ந்த மாண்டி தன்வார்(20) என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தொடர்ந்து பெய்த கனமழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Rajasthan ,Jaipur ,Sawai Madhopur district ,
× RELATED வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்..!!