வாஷிங்டன்: வணிக லாரி ஓட்டுனர்களுக்கு தொழிலாளர் விசாக்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘அமெரிக்க சாலைகளில் பெரிய டிராக்டர்-டிரெய்லர் லாரிகளை இயக்கும் வெளிநாட்டு ஓட்டுனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அமெரிக்க உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துகின்றது. அமெரிக்க லாரி ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை குறைக்கிறது. எனவே வணிக லாரி ஓட்டுனர்களுக்கு தொழிலாளர் விசாக்கள் வழங்குவதை அமெரிக்க நிறுத்துகின்றது. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு லாரி ஓட்டுனர்கள் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு வெளியுறவு துறை உடனடியாக பதிலளிக்கவில்லை. போக்குவரத்து விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புக்களுக்கு வெளிநாட்டு ஓட்டுனர்களால் போக்குவரத்து அடையாளங்களை படிக்கவோ அல்லது ஆங்கிலம் பேசவோ முடியாத சம்பவங்கள் காரணமாக இருக்கலாம் என்பதை தொடர்ந்து சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
