வேலூர், ஆக.23: பெங்களூருவில் இருந்து வேலூருக்கு பலத்த பாதுகாப்புடன் கூடுதலாக விவிபேட், கட்டுப்பாட்டு கருவிகள் நேற்று கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் 2026ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வாக்குச்சாவடி பட்டியல் தயாரிப்பு, கூடுதல் வாக்குச்சாவடி அமைப்பது குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்போது எவ்வளவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாக தோராயமாக கூடுதலாக எவ்வளவு தேவைப்படும் என பட்டியல் தயாரித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் (யாருக்கு வாக்களித்தோம் என்ற கருவி) கட்டுப்பாட்டு கருவிகள் தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பி வைத்து வருகிறது. அதன்படி, வேலூர் மாவட்டத்திற்கு நேற்று துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கான்டெய்னர் லாரிகள் மூலம் 600 விவிபேட் கருவிகளும், 100 கட்டுப்பாட்டு கருவிகளும் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, கலெக்டர் சுப்புலட்சுமி, அரசு கூடுதல் செயலாளர் (தேர்தல்) தர் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு பார்வையிட்டனர்.
பின்னர், வேலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 600 விவிபேட், 100 கட்டுப்பாட்டு கருவிகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர குடோனில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது. அப்போது ஆர்டிஓ செந்தில்குமார், தேர்தல் பிரிவு தாசில்தார் சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உட்பட அனைத்தும் போதுமானதாக இருப்பில் உள்ளது. இருப்பினும் தேர்தல் ஆணையம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கூடுதலாக இயந்திரங்களை ஒதுக்கீடு செய்து அனுப்பி வைத்து வருகிறது. இந்த இயந்திரங்கள் விரைவில் சோதனை செய்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும்’ என்றனர்.
