*அச்சத்தில் பொதுமக்கள்
மூணாறு : மூணாற் நகர் பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகள் வனப்பகுதிகளால் சூழப்பட்ட ஒரு இடமாகும். இங்கு முக்கிய தொழில் தேயிலை விவசாயம். இதனால் மூணாறு எந்த காலநிலையிலும் பச்சை போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கும். இந்த தேயிலை விவசாயத்தை நம்பி இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தொழிலாளர்களின் குடியிருப்புகள் நிலை கொள்வது வனத்தோடு சேர்ந்த பகுதிகளில் ஆகும்.
மூணாறை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி திரிவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. முன் காலங்களில் காட்டு யானைகள் சுற்றித்திரிந்தாலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வந்து தொந்தரவு செய்வதில்லை. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
தொழிலாளர்களின் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் மனிதர்களையும் தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இங்கு இரவு பகல் வித்தியாசம் இல்லாமல் சுற்றித்திரியும் யானைகளால் பொதுமக்களின் உயிருக்கும் சொத்திற்கும் பாதுகாப்பு அற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் முதல் மூணாறு நகரில் காவல் நிலையம் அருகே உள்ள மலை குன்றில் புல் மேடுகளில் ஐந்து காட்டு யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. தகவல் அறிந்த வனத்துறையினர் யானைகள் நகருக்குள் வராமல் இருக்க தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அதே நேரம் இரவு பகல் பாராமல் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டுயானைகளைக் கட்டுப்படுத்த வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
