×

பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் 2000 ஆண்டுகள் பழமையான சங்ககால சுடுமண் தக்களி கண்டெடுப்பு

பண்ருட்டி : பண்ருட்டி அருகே உள்ள மேல்காவனூர் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் பண்ருட்டி அரசு கலை கல்லூரியில் கணினி அறிவியல் மாணவர் டேவிட் ராஜ்குமார் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 2000 ஆண்டுகள் பழமையான சங்ககால மக்கள் நெசவுத்தொழிலுக்கு பயன்படுத்திய சுடுமண் தக்களிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறுகையில்,மேல் காவனூர் தென்பெண்ணை ஆற்று பகுதியில் களஆய்வு மேற்கொண்டபோது, பழங்கால மக்கள் நெசவுத்தொழிலுக்கு பயன்படுத்திய சுடுமண்ணால் செய்யப்பட்ட 2 தக்களிகளை கண்டறிந்தோம்.

தக்களி என்பது களிமண்ணால் செய்து சுடப்பட்ட கூம்புவடிவ அமைப்பை கொண்ட கருவி ஆகும். கூம்பின் மேல் பகுதி பருத்தும் கீழ்பகுதி சிறுத்தும் கூர்மையாக காணப்படும் தக்களி மையத்தில் ஒரு துளையும் இடுவர், அந்த துளையின் வழியாக குச்சி அல்லது கம்பிகளை கொண்டு சொருகி அதன் மறுமுனை கூர்மையான கூம்புவடிவத்தின் முனையில் இருப்பதுபோல அமைத்து கொள்வர்.

தக்களிகள் தமிழக தொல்லியல் அகழாய்வுகளில் சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிக அளவு கண்டறியப்பட்டது.

இதன் மூலம் நமது முன்னோர்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு இருந்தனர் என அறியமுடிகிறது. அதுமட்டும் அல்லாமல் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள பகுதிகளான மேல்காவனூர், தளவானூர் ஆகிய பகுதிகளில் இன்றளவும் ஒரு சிலர் பருத்தி பயிரிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது, என்றனர்.

Tags : Sangam ,Thenpennai river ,Panruti ,Emmanuel ,David Rajkumar ,Government Arts College Panruti ,Melgavanur ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் தனி...