பெங்களூரு: ஆர்.சி.பி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தால் விழித்துக் கொண்டு மாநில அரசு, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்கவும் விதிமுறை மீறினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக சட்டபேரவையில் தாக்கல் செய்துள்ள புதிய மசோதாவில் விழா, மாநாடு, திருவிழா ஆகியவை அனுமதி பெறாமல் நடத்தினாலோ அல்லது நடத்த முயற்சித்தாலோ அந்த நபர் அல்லது அமைப்பினருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.
விழாவில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாலோ அல்லது தொந்தரவு செய்ய முயற்சிப்பதாலோ எந்தவொரு நபருக்கும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
ஒரு கூட்டம் கூடும் இடத்திலிருந்து கலைந்து செல்லும் பணியில் இருக்கும், காவல் துணை ஆய்வாளர் பதவி மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள எந்தவொரு காவல்துறை அதிகாரியின் சட்டப்பூர்வ உத்தரவுகளை மீறும் அல்லது மீறத் தூண்டும் எந்தவொரு நபருக்கும் ஒரு மாத காலத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும். இந்த தண்டனை ரூ.50 ஆயிரம் வரை அபராதத்துடன் தண்டிக்கப்படும்.
