மாஸ்கோ: ரஷ்யாவுடன் வர்த்தக ஒப்பந்தத்திற்கான விதிமுறைகள் கொண்ட குறிப்பில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சீனா எண்ணெய் வாங்குவதன் மூலம் போருக்கு மறைமுகமாக ஆதரவு தருவதாக அமெரிக்கா குற்றச்சாட்டியது. இதனால் இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த 50% இறக்குமதி வரி வரும் 27ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில், யூரேசியா பொருளாதார ஒன்றியத்தில் இடம் பெற்றுள்ள ரஷ்யா, அர்மேனியா, பெலாரஸ், கிர்கிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்திற்கான அடிப்படை விதிமுறைகள் கொண்ட குறிப்பில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்திய வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அஜய் பாதூ மற்றும் யூரேசியா பொருளாதார ஆணையத்தின் வர்த்தக கொள்கை துறையின் துணை இயக்குநர் மிக்செல் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இருதரப்பினரும் விவாதித்தனர். இத்தகவலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் யூரேசியா ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தகம் 2024ம் ஆண்டில் 7% உயர்ந்து, 69 பில்லியன் டாலராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், 3 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு துணை பிரதமர் டெனிஸ் மாண்டுரோவை சந்தித்து பேசினார். இதனிடையே அமெரிக்கா விதித்த கூடுதல் வரியால் ஏற்படும் இழப்பை சமாளிக்கும் வகையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலையில் 5% தள்ளுபடி வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
