×

காலம் தவறிய மழையால் நெல்பயிர்கள் பாதிப்பு ஏக்கருக்கு 5 மூடை கூட கிடைக்காது காரைக்குடி விவசாயிகள் கவலை

காரைக்குடி, டிச.10: காலம் தவறி பெய்த மழையால் போதிய விளைச்சல் இல்லாமல் போகும் என விவசாயிகள் புலம்பி வருகின்றனர். காரைக்குடி அருகே பெரியகொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்ட நென்மேனி, தச்சகுடி, சோனார்கோட்டை, கண்டங்கருவயல், சின்னகொட்டகுடி, அழகுநாச்சிவயல், நக்கீரன்வயல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 1,200 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது. விவசாயத்தை நம்பி 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நெம்மேனி கண்மாய், செல்லன்கண்மாய், மலையிட்டான் கண்மாய், பெரியகொட்டகுடி கண்மாய், ஓச்சன் கண்மாய் உள்பட 10க்கும் மேற்பட்ட கண்மாய்கள் விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இப்பகுதியில் போதிய மழையில்லாததால் பயிர்கள் கருகிபோய் உள்ளன. தற்போது பயிர்விளைந்து 85 நாட்கள் ஆன நிலையில் தொடர் மழை பெய்து வருவதால் கருகிய பயிர்கள் எல்லாம் சூரையாக போனதோடு அதிக மழையால் விளைச்சலுக்கும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

விவசாயி தனபால் கூறுகையில், விவசாயத்தை நம்பியே எங்கள் பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். சரியான நேரத்தில் மழை பெய்யாமல் காலம் தவறி பெய்த மழையால் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிக மழை காரணமாக ஒரு ஏக்கருக்கு குறைந்தது 30 மூடை நெல் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த நிலையில் 5 மூடைகள் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. விதை விதைத்தது, உழவு கூலி, மருந்து அடித்தது, களை எடுத்தது என பல்வேறு வகையில் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். மழையால் பயிர்கள் நன்றாக விளைந்து இருந்தாலும் நெல்கதிர் பிடிக்காமல் போய்விடும். இதனால் எங்களுக்கு செலவு செய்த தொகை முற்றிலும் நஷ்டம் ஏற்படும். ஏற்கனவே 2018-2019ம் ஆண்டுக்கான பயிர்காப்பீடு தொகை தராமல் உள்ள நிலையில், தற்போது ஏற்படும் இழப்பால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே அரசு எங்களுக்கு நிலுவையில் உள்ள பயிர்காப்பீடு தொகையை வழங்குவதோடு, தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றார்.

Tags : Karaikudi ,
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க