×

வறுமை கொடுமையால் விபரீத முடிவு ரயிலில் விழுந்து தாய், 2 மகள்கள் தற்கொலை

விருதுநகர்: குடும்ப வறுமையின் காரணமாக ஓடும் ரயில் முன் பாய்ந்து 2 மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகர் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அருகே பட்டம்புதூரில் ரயில்வே தண்டவாளத்தில் உடல்கள் துண்டு துண்டாக சிதறி கிடப்பதாக விருதுநகர் ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் விசாரித்ததில் இறந்தது தாய், 2 மகள்கள் என்பது தெரிந்தது. விருதுநகர் பட்டம்புதூர் காலனியை சேர்ந்தவர் ராஜவள்ளி (60). இவருக்கு சிறுநீரக குறைபாடு இருந்தது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். கணவர் தர்மர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு மாரியம்மாள் (30), முத்துமாரி (27), முத்துபேச்சி (25) என 3 மகள்கள் உள்ளனர்.

மாரியம்மாள், முத்துபேச்சி இருவரும் மாற்றுத்திறனாளிகள். இதில் முத்துமாரிக்கு திருமணம் முடிந்து விட்டது. மாற்றுத்திறனாளிகளான 2 மகள்களையும் வறுமை காரணமாக திருமணம் செய்து கொடுக்க முடியாமல் திணறி வந்ததாக கூறப்படுகிறது. மன உளைச்சல் காரணமாக நேற்று மாலை திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் ரயில் முன்பு பாய்ந்து தாய் ராஜவள்ளி, மகள்கள் மாரியம்மாள், முத்துபேச்சி ஆகிய மூவரும் தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் சிதறிக்கிடந்த உடலின் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதால் முகம் உள்ளிட்ட உடல் பாகங்கள் துண்டானதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. ராஜவள்ளி கையில் பெயரை பச்சை குத்தி இருந்ததால் அடையாளம் கண்டுபிடிக்க முடிந்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Virudhunagar ,Pattambudur ,Virudhunagar… ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...