×

குடியாத்தம் வனப்பகுதியில் விழுங்க முயன்ற ஆட்டை மீட்டபோது தனது உடலில் சுற்றிய மலைப்பாம்பை வெட்டி கொன்ற விவசாயி

குடியாத்தம், டிச. 10: குடியாத்தம் வனுப்பகுதியில் விழுங்க முயன்ற ஆட்டை மீட்டபோது, தனது உடலில் சுற்றிய மலைப்பாம்பை வெட்டி கொன்ற விவசாயிக்கு, அனுமதியின்றி, ஆயுதத்துடன் காட்டில் நுழைந்ததாக வனத்துறையினர் ₹15ஆயிரம் அபராதம் வித்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கனவாய்மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி(59), விவசாயி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அருகே உள்ள காப்பு காட்டிற்கு ஓட்டி சென்றார். அப்போது வனப்பகுதியில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று, விவசாயியின் ஒரு ஆட்டை விழுங்க முயன்றுள்ளது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த கோவிந்தசாமி, ஆட்டை மீட்க முயன்றார். அப்போது, மலைப்பாம்பு, திடீரென கோவிந்தசாமியின் உடலில் சுற்றிக்கொண்டது. இதனால் கோவிந்தசாமி, தனது கையில் இருந்த கொடுவாளால், மலைப்பாம்பின் தலையை வெட்டி துண்டாக்கினார். பின்னர், தனது ஆடுகளை ஓட்டிக்கொண்டு பதற்றத்துடன் வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த குடியாத்தம் வனத்துறையினர், விவசாயி கோவிந்தசாமியை பிடித்து விசாரித்தனர். அப்போது அனுமதியின்றி காட்டுக்குள் சென்றது, ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக வனத்துறையினர் வழக்குப்பதிந்து கோவிந்தசாமிக்கு ₹15 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கோவிந்தசாமி ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பை வெட்டி கொன்றது தெரியவந்தது.

Tags : forest ,Gudiyatham ,
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ