வானூர், ஆக. 21: வானுார் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர். புதுச்சேரி செல்லான் நகரை சேர்ந்த வினோத் (38), கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் சென்னையில் நடந்த உறவினரின் விசேஷத்திற்கு காரில் சென்றுள்ளார். இந்த காரை வினோத் ஓட்டிச்சென்றுள்ளார். காரில், அவரது தாய் பேபி (70), மனைவி விஷ்ணுபிரியா (32), மகன் வருண் (7), மகள் வைஷ்ணவி (4), வினோத்தின் அண்ணன் ரஜினியின் மகன் ராகுல் (7) ஆகியோர் அமர்ந்து சென்றனர்.
பின் நேற்று புதுச்சேரி திண்டிவனம் சாலை வழியாக காரில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது ராவுத்தன்குப்பம் கிராம சந்திப்பு அருகில் முன்னால் சென்ற டிப்பர் லாரியை கடக்க முயன்றுள்ளார். அப்போது கார் லாரியில் உரசி உள்ளது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் இடதுபுறமாக சாலையோரத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பக்கம் நொறுங்கியது. 6 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தகவலறிந்த ஆரோவில் போலீசார் மற்றும் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் காயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
