புதுடெல்லி: பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு பெரும் உந்துதல் அளிக்கும் வகையில், இந்திய விமானப்படைக்காக 97 தேஜஸ் மார்க் 1ஏ ரக போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய விமானப்படையில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் மிக்-21 ரக போர் விமானங்களுக்கு ஓய்வளிக்கும் பணிகள் அடுத்த சில வாரங்களில் நிறைவடைய உள்ளன. அவற்றுக்கு மாற்றாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன விமானங்களை படையில் சேர்க்க ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.48,000 கோடி மதிப்பில் 83 தேஜஸ் மார்க் 1ஏ ரக விமானங்களை வாங்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு (எச்.ஏ.எல்) ஒப்பந்தம் வழங்கப்பட்டது. உள்நாட்டுமயமாக்கலை ஊக்குவிக்கும் இந்த திட்டம், நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புத்துறை சார்ந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் பெரும் வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.
இந்நிலையில், இந்திய விமானப்படையை மேலும் பலப்படுத்தும் விதமாக, கூடுதலாக 97 தேஜஸ் மார்க் 1ஏ ரக போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்திற்கு உயர் மட்டக் குழு கூட்டத்தில் இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும். ஆரம்பக்கட்ட தேஜாஸ் விமானங்களை விட, இந்த மார்க் 1ஏ ரக விமானங்கள் மேம்பட்ட மின்னணுவியல் கருவிகள், அதிநவீன ரேடார்கள் மற்றும் 65 விழுக்காட்டிற்கும் அதிகமான உள்நாட்டு பாகங்களைக் கொண்டிருக்கும். இந்தியாவின் தற்சார்பு மற்றும் ‘மேக் இன் இந்தியா’ முன்னெடுப்புகளுக்கு முன்னோடியாக விளங்கும் இந்த திட்டம், விண்வெளித்துறையில் நாட்டின் முக்கிய அடையாளமாக திகழ்கிறது. இதைத் தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட தேஜஸ் மார்க் 2 ரக விமானங்கள் மற்றும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களையும் எச்.ஏ.எல் நிறுவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

