×

சட்டப்பேரவையால் 2வது முறையாக மசோதா அனுப்பி வைக்கப்பட்டால் ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் விதித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் விசாரணை இரண்டாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி ஆர் ஹவாய் அமர்விலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து இன்று ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதங்களை முன் வைத்தார். அதில் ஆளுநருக்கு அரசியல் அமைப்பில் சில அதிகாரங்களை வழங்கி உள்ளது அந்த அதிகாரத்தின் அடிப்படையில் அவர் முடிவை மேற்கொள்ளலாம் விருப்புரிமை பேரில் ஆளுநர் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, அரசியல் நிர்ணய சபை வாதங்களை படிக்க உங்களுக்கு உரிமை உண்டு.

ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறியதா இல்லையா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் அரசியல் நிர்ணய சபையின் இரண்டு அதிகார மையங்களாக இருவர் உள்ளனர். ஒருவர் முதலமைச்சர். மற்றொருவர் ஆளுநர் குறிப்பாக ஆளுநரின் அதிகாரம் என்பது விருப்புரிமையை பயன்படுத்தி கூடியது என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அதுகுறித்து பயன்படுத்தும் விதம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முன்னதாக சில உத்தரவுகளையும் தெளிவாக பிறப்பித்துள்ளது. அதனையும் ஒன்றிய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து அதற்கு பதில் அளித்த துஷார் மேத்தா,” அம்பேத்கரின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் ஆளுநர்கள் முடிவுகளை எடுக்க அனைத்து அதிகாரமும் உள்ளது. மேலும் குடியரசுத் தலைவருக்கு மசோதா அனுப்பி வைக்கவும் அவருக்கு உரிமை உள்ளது. ஏற்றுக்கொள்ள முடியாத சில விவகாரங்களை தவிர பிற விவகாரங்களில் மட்டுமே அமைச்சரைவின் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் ஆவார். ஒரு மசோதா திருப்பி அனுப்பப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கலாம், அல்லது வழங்காமலும் இருக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது மசோதாவை மறு பரிசீலனை செய்யலாம் இவ்வாறு அரசியல் அமைப்பில் ஆளுநருக்கு என்று சில அதிகாரங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆளுநர் என்பவர் ஒரு தபால்காரர் கிடையாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி,” சட்டப்பேரவையால் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு முதல்முறையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது திருப்பவும் சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதனை அமைச்சர்கள் மற்றும் அரசு பரிசீலனை செய்து இரண்டாவது முறையாக மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அதனை ஆளுநர் ஒப்புதல் வழங்குவதை தவிர வேறு வழியே இல்லை. மசோதாக்களின் மீது முடிவு எடுப்பது நிறுத்தி வைப்பது குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது இதில் உள்ள காலதாமதமே முக்கிய பிரச்னையாக கருதப்படும்.

மேலும் ஒரு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டால் மசோதா செயல்பாடு இழந்துவிட்டது என்று பொருள் என்பதனை ஏற்க முடியாது. ஏனெனில் அந்த அர்த்தம் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசானது ஆளுநரின் விருப்பப்படி தான் செயல்படும் என்பது போல் ஆகிவிடும் தமிழ்நாடு வழக்கில் ஆளுநர் பத்து மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக கூறினார். ஆனால் நிறுத்தி வைப்பதாக அரசுக்கு எந்த தகவலும் அவர் தெரிவிக்கவில்லை இதுவே பிரச்னைக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மசோதாவில் ஏதாவது குறைபாடு இருந்திருந்தால் ஆளுநர் விதிமுறையின் கீழ் அதிகாரங்களை பயன்படுத்த தேவையில்லை என நீங்கள் கூறுகிறீர்கள். அதனை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பிற்பகலும் வாதங்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Tags : Legislative Assembly ,Supreme Court ,New Delhi ,President ,Draupadi Murmu ,Chief Justice ,P R Hawai ,
× RELATED அசாமில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு...