போபால்: கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த மபி சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு திருட்டு நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மபி சட்டப்பேரவைக்கு 2023 நவம்பர் 17 அன்று தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பா.ஜ 163 இடங்களிலும், காங்கிரஸ் 66 இடங்களிலும் வென்றது. இந்த தேர்தலில் 27 தொகுதிக்கு மேல் வாக்கு திருட்டு நடந்துள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான உமாங் சிங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
மபி சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு லட்சக்கணக்கான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் குறுகிய வித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகளில், வாக்காளர் அதிகரிப்பு தோல்வியின் இடைவெளியை விட மிக அதிகமாக உள்ளது. மபியில் 27க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்கு திருட்டு நடந்தது. இது பாஜவுக்காக நடந்த வாக்கு திருட்டு.
2023 ஜனவரி 5 முதல் ஆகஸ்ட் 2 வரை ஏழு மாதங்களில், மத்தியப் பிரதேசத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.64 லட்சம் அதிகரித்துள்ளது. அதே போல் ஆகஸ்ட் 2 முதல் அக்டோபர் 4 வரையிலான இரண்டு மாதங்களில், எதிர்பாராத விதமாக 16.05 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இதன் பொருள் ஒவ்வொரு நாளும் 26,000 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
ராகுல் காந்தி கூறியது போல் இந்த நன்கு திட்டமிடப்பட்ட தேர்தல் சதித்திட்டத்திற்கு மத்தியப் பிரதேசமும் ஒரு பெரிய பலியாகும். மத்தியப் பிரதேச மாநில தேர்தல் ஆணையம் 2022 டிசம்பர் 2 அன்று வாக்காளர் பட்டியலில் உள்ள 8,51,564 போலி பெயர்களை நீக்க உத்தரவிட்டு ஒரு உத்தரவை பிறப்பித்தது. ஆனால் எந்த மாவட்ட தேர்தல் அதிகாரியும் பெயர் நீக்கத்தை பட்டியலிடவில்லை. ஆர்டிஐ மூலம் கேட்டும் கூட உரிய தகவல் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
