×

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கைகேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

அதாவது, 1 முதல் 5ம் வகுப்புக்கு 60 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும், 61 முதல் 90 வரை 3 ஆசிரியர்கள், 91 முதல் 120 வரை 4 ஆசிரியர்கள், 121 முதல் 200 வரை 5 ஆசிரியர்களும் இருக்க வேண்டும். இதேபோல், ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் கூடுதலாக அனுமதிக்கப்பட வேண்டும். இதுதவிர 6 முதல் 8 வகுப்பு வரை குறைந்தபட்சம் 3 பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும். ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருப்பின் ஒரு பிரிவாக கணக்கில் கொண்டு ஒரு ஆசிரியர் நியமிக்க வேண்டும். மாணவர் எண்ணிக்கை 50க்கு அதிகமாக இருந்தால் குறிப்பிட்ட அந்த வகுப்பை இரு பிரிவுகளாக பிரித்துவிட வேண்டும்.

6 முதல் 10ம் வகுப்பு வரை 150க்கும் குறைவாக மாணவர் எண்ணிக்கை இருப்பின் 6 ஆசிரியர்கள் (ஒரு பாடத்துக்கு ஒருவர் வீதம்) அனுமதிக்க வேண்டும். 9, 10ம் வகுப்பில் தலா 40 மாணவர் இருப்பின் (1:40) ஒரு பிரிவாக கணக்கில் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட வகுப்பில் மாணவர் எண்ணிக்கை 60க்கு அதிகமாக இருந்தால் அந்த வகுப்பை இரு பிரிவுகளாக பிரிக்க வேண்டும். பணிநிர்ணயம் செய்யும்போது ஓர் ஆசிரியருக்கு வாரத்துக்கு 28 பாடவேளை ஒதுக்கப்பட வேண்டும். பாடவேளை குறைவாக உள்ள ஆசிரியர்களை கீழ்நிலை வகுப்புக்கு இறக்கம் செய்யாமல் அருகேயுள்ள பள்ளிக்கு மாற்றுப் பணியில் அனுப்பலாம்.

இதுதவிர ஆங்கில வழிப்பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். 15க்கும் குறைவாக இருந்தால் அந்த மாணவர்களை அருகே உள்ள வேறு பள்ளியில் ஆங்கில வழிப் பிரிவில் சேர்க்க வேண்டும். கூடுதல் தேவையுள்ள பணியிடங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கான வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் நிர்ணயம் செய்யப்பட்ட விவரங்களை வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்துக்குள் இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Tags : Chennai ,Directorate of School Education ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்