×

பெண்களின் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றத்தை தடுக்க ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்: தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆன்லைன் பணமோசடிகளை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்டதைப் போல, இணையதளங்களில் பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் தடுப்பது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணையதளங்களில் பகிரப்பட்ட தனது அந்தரங்க வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இன்னும் 8 இணையதளங்களில் தொடந்து வருகிறது. ஆன்லைன் பண மோசடிகளை தடுக்க ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் சைபர் கண்காணிப்பு நடைமுறை தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், பெண்களுடைய ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை உடனடியாக கண்டறிந்து தடுக்கும் வசதியை ஏற்படுத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். ஒன்றிய அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆதி குமரகுரு ஆஜராகி, இதுகுறித்து ஒன்றிய அரசு குழு அமைத்து உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழகத்தில்தான் மனுதாரரின் வீடியோக்கள் உள்ளன என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, 8 இணையதளங்களில் பகிரப்பட்டு வரும் பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோவை அகற்ற வேண்டும். ஆன்லைன் பணமோசடிகளை தடுக்க ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தும் சைபர் கண்காணிப்பு நடைமுறையை, பெண்களின் அந்தரங்கள் வீடியோக்கள் பகிரப்படுவதை உடனடியாக தடுக்க பயன்படுத்துவது குறித்து டிஜிபி பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags : High Court ,Tamil Nadu DGP ,Chennai ,Chennai High Court ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...