×

நிதி மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் அனைத்து சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: நிதி மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் அனைத்து சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டது. 3வது முறையாக அவர்கள் ஜாமின்கேட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேவநாதன் யாதவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாம் ஜாமினில் வெளியே வந்தால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதற்கான நிதி தன்னால் திருப்ப முடியும் என்று வாதம் முன் வைக்கப்பட்டது. அதே போல் சாட்சிகளை கலைக்கமாட்டார். கடுமையான நிபந்தனை கொடுத்தாலும் ஏற்று கொள்வதாக அவர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் இந்த வழக்கில் முதலீட்டாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த சொத்துக்களில் பெரும்பாலானவை 3ம் நபரின் பெயரிலும் அதின் நிறுவனரின் பெயரும் இருப்பதால் அதனை முடக்குவதில் சிக்கல் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதே போல் காவல் துறை தரப்பில் தேவநாதன் யாதவ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு அதிகமாக இருப்பதாகவும் நிஜத்தில் அதன் மதிப்பு 48 கோடி மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டது. தேவநாதன் யாதவ்க்கு ஜாமின் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சொத்துக்களை முடக்குவதில் தங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபினையும் இல்லை என உரிமையாளரிடமும், நிறுவனரிடமும் ஒப்புதல் பெற்று அதனை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு விசாரணை 18.8.2025 ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 6 வார காலம் இடைக்கால ஜாமின் கேட்டு தேவநாதன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து ஆகஸ்ட் 25 முடிவெடுக்கப்படும். ஒரு சென்ட் சொத்து அல்லது ஒரு ரூபாயை மறைத்தால் கூட கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற விசாரணை திருப்தி அளிக்கவில்லை. ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும் என்ற காவல்துறை வாதத்தை ஏற்க முடியாது என நீதிபதி மறுப்பு தெரிவித்தார். ஓராண்டுக்கு மேலாக தேவநாதனை சிறையில் வைத்திருப்பதால் விசாரணையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது?. இதுவரை 2 வருடத்திற்குள் வழக்கை விசாரித்து தண்டனை பெற்று தந்த ஒரு வழக்கை சொல்லுங்கள். பொருளாதார குற்றப்பிரிவு வரலாற்றில் ஒரு வழக்கிலாவது விரைந்து பணத்தை திரும்ப பெற்று தந்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதி நிதி மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் அனைத்து சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Tags : High Court ,Devanathan ,Chennai ,Madras High Court ,Devanathan Yadav ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...