×

ஆயுர்வேத டாக்டர்களுக்கு 54 வகை அறுவை சிகிச்சை செய்ய அனுமதி கண்டித்து அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி முன்பு நடந்தது

வேலூர், டிச.9: அலோபதி அறுவை சிகிச்சை செய்ய ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அனுமதி அளிக்கும் அரசின் முடிவை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் முடித்த டாக்டர்கள் அலோபதி ஆங்கில மருத்துவ முறையில் எம்.எஸ் என்ற பட்டத்துடன் 58 வகையிலான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அலோபதி டாக்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசின் முடிவை கண்டித்து அரசு டாக்டர்கள் சங்கம், இந்திய மருத்துவர் சங்கம் என டாக்டர்கள் சங்கங்கள் மாநிலம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். இதில் இந்திய மருத்துவர் சங்கம், அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் தர்மாம்பாள், அனிதா, மகேஷ், மதன், நர்மதா, முஸ்தபா, ஜெகன்பாபு, தானேஷ்பிரசாத், குமரன், அருண்பிரசாத் உட்பட 25 பேர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக அரசு டாக்டர்கள் கூறும்போது, ‘ஆயுர்வேதம் படித்த டாக்டர்களுக்கு எம்எஸ் என்ற பட்டத்துடன் 58 வகையான ஆங்கிலவழி மருத்துவ அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள அனுமதிப்பது தவறான முடிவாகும். அவர்களால் அனஸ்தீஸியா சிகிச்சை உட்பட அறுவை சிகிச்சையை செய்ய முடியாது.அதேநேரத்தில் ஆங்கிலவழி நர்சுகளக்கு அலோபதி சிகிச்சையின் அனைத்து நிலைகளும் அனுபவத்தின் அடிப்படையில் தெரியும். அதற்காக அவர்கள் அந்த சிகிச்சையை செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை. இந்த நிலையில் ஆங்கில மருத்துவத்துக்கு சம்பந்தமே இல்லாத ஆயுர்வேத டாக்டர்களுக்கு எதன் அடிப்படையில் ஆங்கிலவழி அறுவை சிகிச்சைக்கு அனுமதி அளிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் தற்போதைய நிலையில் ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் இருந்தாலே போதுமானது. ஆனால் தமிழகத்தில் 700 பேருக்கு ஒரு டாக்டர் வீதம் உள்ளனர். டாக்டர்கள் பற்றாக்குறை என்பதே இல்லை’ என்றனர்.

இதையடுத்து இந்திய மருத்துவர் சங்க தலைவர் மதன்மோகன், செயலாளர் நர்மதா, பல் மருத்துவர் சங்க தலைவர் காயத்ரி, செயலாளர் முஸ்தபா ஆகியோர், வேலூர் எம்பி கதிர்ஆனந்தை நேரில் சந்தித்து, ஆயுர்வேத டாக்டர்கள் 58 வகையான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் முடிவை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட எம்பி கதிர்ஆனந்த், இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசுவதாக உறுதி அளித்தார்.

Tags : protest ,government doctors ,doctors ,surgeries ,Vellore Government Medical College ,
× RELATED மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மக்கள் மறியல் போராட்டம்..!!