தர்மபுரி, ஆக.18: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில், கரைகளில் கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் தர்மபுரி ராமக்கால் ஏரி, சோகத்தூர் ஏரி, கொளகத்தூர் ஏரி, அதியமான்கோட்டை ஏரி, லளிகம் ஏரி உட்பட 74 ஏரிகள் உள்ளன. இதில், பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கியுள்ளன.
மேலும், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் பாதிப்பு ஏற்படும் என கருதி நீர் வரத்து பாதைகளில் மாற்றம் செய்து வருகின்றனர். தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தர்மபுரி -சேலம் நெடுஞ்சாலையில் 270 ஏக்கர் பரப்பளவில் ராமக்கால் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை ஒட்டி, பழைய தர்மபுரி மற்றும் சவுளுப்பட்டி, கீழ் மாட்டுக்காரனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. அதே வேளையில், ஏரியை சுற்றி ஆக்ரமிப்புகள் அதிகரித்துள்ளது.

