- முதல்வர்
- எம்.கே. ஸ்டாலின்
- ராகுல்
- வி.வி.எஸ்
- திருமாவளவன்
- சென்னை
- ராகுல் காந்தி
- தோல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி நேற்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “ஆழ்ந்த அறிவும்-தெளிவான சிந்தனையும்-உழைக்கும் மக்களின் நலன் காக்க உரமாகும் தியாக எண்ணமும் கொண்ட அருமைச் சகோதரர்-எழுச்சித் தமிழர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
இலட்சியப் பயணத்துக்குத் துணையாக வரும் தாங்கள் மகிழ்ச்சியுடனும் உடல்நலனுடனும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட அறிக்கையில், “திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அனைவரும் கண்ணியம், சம உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்புக்காக நாம் தொடர்ந்து ஒன்றுபட்டு நிற்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாளையொட்டி திருமாவளவன் சென்னையில் நடந்த விழாவில் தொண்டர்கள் மத்தியில் பிறந்தநாள் கேக்கை வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். விழாவில் கமல்ஹாசன் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது விசிக துணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ சார்பில் தங்கம் முலாம் பூசப்பட்ட ஒரு கிலோ வெள்ளி செயினை கமல்ஹாசன் திருமாவளவனுக்கு அணிவித்தார். மேலும் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ ரூ.5 லட்சம் தேர்தல் நிதியையும் வழங்கினார்.
விழாவில் பொதுச்செயலாளர் ம.சிந்தனைச் செல்வன், துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, எம்எல்ஏக்கள் ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு, முதன்மைச் செயலாளர் ஏ.சி. பாவரசு, தலைமை நிலையச் செயலாளர் பாலசிங்கம், செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலன், மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.பன்னீர்தாஸ். 190வது வட்ட செயலாளர் சிட்டு (எ) ஆமோஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழாவில் திருமாவளவன் பேசுகையில், “திருமாவளவன் ஏன் அரசை எதிர்த்துப் போராடவில்லை? என்று விமர்சனங்களைக் கூறுகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் என்ற சொல்லுக்கு இன்னொரு பொருள் குப்பைப் பொறுக்குபவர்கள் அல்லது குப்பை அள்ளுகிறவர்கள். குப்பை அள்ளுகிறவர்களை பணிநிரந்தரம் செய்து, அந்தத் தொழிலையே நீங்கள் செய்து கொண்டிருங்கள் என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
அதிலிருந்து மீள வேண்டும் என்பதுதான் நமது போராட்டம். அந்தத் தொழிலைச் செய்யக்கூடியவர்கள், தொடர்ந்து அதனைச் செய்யக் கூடாது. சொல்லப் போனால், அதனை நாம் எதிர்க்க வேண்டும். இந்த தலைமுறை, அந்தத் தொழிலை செய்துவிட்டுப் போகட்டும். அடுத்த தலைமுறை, அந்தத் தொழிலுக்குள் போகக் கூடாது என்பதுதானே சமூக நீதி. அதிலிருந்து அவர்களை மீட்பதுதானே சமூக நீதி” என்றார்.
