×

மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 92வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு, தர்மபுரியில் அவரது திருவுருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முரசொலி மாறன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

கலைஞரின் மனசாட்சியாக விளங்கிய வரும், திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மறைந்த முரசொலி மாறனின் 92வது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் திமுகவினரால் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தர்மபுரி அதியமான்கோட்டை அவ்வை வழி சந்திப்பு அருகில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முரசொலி மாறன் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரியகருப்பன், ராஜேந்திரன், எம்பி ஆ.மணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் தடங்கம் சுப்ரமணி, இன்பசேகரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தர்மச்செல்வன், முன்னாள் எம்.பி., தாமரைச்செல்வன், நகர செயலாளர் நாட்டான் மாது மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முரசொலி மாறன் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் முரசொலி மாறன் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி,

எம்எல்ஏக்கள் மயிலை த.வேலு, ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, தாயகம் கவி, தலைமை நிலைய செயலாளர் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, மாவட்ட செயலாளர் சிற்றரசு, சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவுச் செயலாளர் சுபேர்கான், பகுதி செயலாளர்கள் மா.பா.அன்புதுரை, மதன்மோகன், வினோத் வேலாயுதம், நுங்கை வி.எஸ்.ராஜ், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பொன்னேரி அன்புவாணன், மாநில வர்த்தனர் அணி துணை செயலாளர் சேப்பாக்கம் வி.பி.மணி, தலைமைக் கழக பேச்சாளர் வி.பி.பிரபாகரன், வழக்கறிஞர் பிரசன்னா,

பரிதி இளம் சுருதி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், தலைமை செயற்குழு-பொதுக்க்குழு உறுப்பினர்கள், முன்னாள்-இந்நாள் எம்பி,எம்எல்ஏக்கள், பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், வட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் திமுக தோழர்கள் என ஏராளமானோர் முரசொலி மாறன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதே போல மாநிலம் முழுவதும் கட்சி அலுவலகங்களில் முரசொலி மாறனின் திருஉருவப்படத்திற்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு:
எளிய வேளாண் குடும்பத்தில் தியாகராஜசுந்தரமாகத் தோன்றி, கலைஞரின் தோளில் வளர்ந்து, அவரால் நெடுமாறன் எனப் பெயர்மாற்றமும் பெற்று, அவ்வுயிர்நிகர் தலைவரின் மனசாட்சியாகவே திகழ்ந்து, இந்திய ஒன்றியத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக ஏற்றமும் கண்ட மதிப்புக்குரிய முரசொலி மாறனின் பிறந்தநாள்.

இதழியல், திரைப்படம், அரசியல் எனக் களம் கண்ட அனைத்துத் துறைகளிலும் தனிமுத்திரை பதித்து; திராவிட இயக்க வரலாறு, ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?, மாநில சுயாட்சி எனக் காலவெள்ளத்தில் கரைந்திடாக் கருத்துக் கருவூலங்களை நமக்காக வழங்கிச் சென்றிருக்கும் அவரது பணிகளை நன்றியோடு நினைவுகூர்ந்து வணங்குகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

* முரசொலிமாறன் புகழ் ஓங்கட்டும்
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளம் பதிவில், “கலைஞரின் மனசாட்சியாக வாழ்ந்த முரசொலி மாறனின் பிறந்தநாள் இன்று. ‘முரசொலி’ வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கும், அருகே வைக்கப்பட்ட திருவுருவப்படத்துக்கும் மரியாதை செலுத்தினோம்.

கலைஞரால் வார்த்தெடுக்கப்பட்டு, எழுத்து-பத்திரிகை-திரைத்துறை-அரசியல்-அரசு நிர்வாகம் என அனைத்துத் துறைகளிலும் உயரங்களைத் தொட்டவர். மாநில சுயாட்சிக்காகவும்-வளரும் நாடுகளின் உரிமைக்காகவும் குரல் கொடுத்தவர். திராவிட இயக்கக் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்த முரசொலி மாறனின் பணிகளைப் போற்றுவோம். அவர் புகழ் ஓங்கட்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Union Minister ,Murasoli Maran ,Deputy Chief Minister ,Udhayanidhi ,Chennai. ,Chennai ,Dharmapuri ,Udhayanidhi Stalin ,Chennai… ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்