×

திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள்: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருமலை: தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். இதனால் தரிசனத்திற்கு சுமார் 24 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுதந்திரதினம், ஆடிக்கிருத்திகை, கிருஷ்ணஜெயந்தி மற்றும் வாரவிடுமுறை நாள் என தொடர் விடுமுறை காரணமாக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் திருமலை முழுவதும் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. கிருஷ்ணஜெயந்தி மற்றும் ஆடிக்கிருத்திகை நாளான நேற்று 87,759 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

42,043 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.16 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சிலா தோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளதால் போதிய அறைகள் கிடைக்காமல் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தல்கள் மற்றும் மாட வீதிகள், மடங்களில் தங்கி உள்ளனர்.

Tags : Tirupati temple ,Tirumala ,Tirupati Ezhumalaiyan ,Independence Day ,Aadikrithigai ,Krishna Jayanti ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...