×

மற்றொரு நடிகை குறித்து சர்ச்சை கருத்து; பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகை: பழைய வீடியோ வைரலானதால் பரபரப்பு

மும்பை: நடிகை பிபாசா பாசுவின் உடல் தோற்றத்தை கேலி செய்து பல ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ தற்போது வைரலானதால் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, நடிகை மிருணாள் தாகூர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தனது ஆரம்பகால வாழ்க்கையில் தொலைக்காட்சி தொடரில் நடித்தபோது அளித்த பேட்டி ஒன்றின் வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலானது. அந்த வீடியோவில், நடிகை பிபாசா பாசுவின் உடல் தோற்றம் குறித்து பேசிய மிருணாள், ‘அவர் ஆண்தன்மை உடல்வாகு கொண்டவராக இருக்கிறார். ஆனால் நான் பிபாசாவை விட மிகவும் சிறந்தவர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதை அடுத்து, மிருணாள் தாகூர் மற்றொரு நடிகையை உருவகேலி செய்வதாகவும், அவமதிப்பதாகவும் இணையவாசிகள் கடுமையாக விமர்சித்தனர். அதேசமயம், அவரது ரசிகர்கள் சிலர், அது அவரது அனுபவமில்லாத இளம் வயதில் விளையாட்டாக பேசியது என்றும், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இந்த சர்ச்சை பெரும் விவாதமானதை தொடர்ந்து, நடிகை மிருணாள் தாகூர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மனப்பூர்வமான மன்னிப்புக் கோரி பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘எனது 19வது வயதில் முட்டாள்தனமான சில விஷயங்களை பேசியுள்ளேன். விளையாட்டாகக் கூறும் வார்த்தைகள் கூட எந்த அளவிற்கு காயப்படுத்தும் என்பதை அப்போது நான் உணரவில்லை.

அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். யாரையும் உருவகேலி செய்யும் நோக்கம் எனக்கில்லை. நேர்காணல் ஒன்றில் எல்லை மீறிய விளையாட்டுப் பேச்சாக பேசிவிட்டேன். காலப்போக்கில், அழகு என்பது எல்லா வடிவங்களிலும் வரும் என்பதை உணர்ந்து மதிக்கக் கற்றுக்கொண்டேன்’ என்று உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, நடிகை பிபாசா பாசு தனது சமூக ஊடகப் பக்கத்தில், ‘வலிமையான பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள்’ என்று மறைமுகமாக பதிவை ஒன்றை பகிர்ந்தார். இந்த சம்பவம், சினிமாத் துறையில் உடல் தோற்றம் மற்றும் பேசும் வார்த்தைகளின் தாக்கம் குறித்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Mumbai ,Bipasha Basu ,Mrunal Tagore ,Bollywood… ,
× RELATED நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி...