×

மூக்கையூர் கடலில் மீண்டும் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் படகுகளுக்கு பூஜை போட்டு கிளம்பினர்

சாயல்குடி. டிச.9: சாயல்குடி பகுதியில் 20 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலையில் மீனவர்கள் படகுகளுக்கு பூஜை செய்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். சாயல்குடி அருகே ரோச்மாநகர், நரிப்பையூர், மூக்கையூர், மாரியூர், கீழமுந்தல், மேலமுந்தல், ஏர்வாடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மீனவ குடும்பங்கள் உள்ளன. மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதி என்பதால் மீன்பிடித்தொழில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நிவர் புயல், புரெவி புயல், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்ததை தொடர்ந்து, மீனவர்கள் கடலுக்குள் செல்ல அரசு தடை விதித்தது. இதனால் மூக்கையூர், ஏர்வாடி மீன்பிடி துறைமுகத்தில் 200 க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள், 100க்கும் மேற்பட்ட விசை படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

கடலுக்குள் செல்லாததால் மீனவர்கள் துறை முகத்தில் படகுகளை சீரமைத்தல், பழுது பார்த்தல், வலை பின்னுதல், வலை சீரமைத்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முதல் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன்வளத்துறை அனுமதியளித்தது. இதனையடுத்து மீன்வளத்துறையில் அனுமதி சீட்டு பெற்ற மீனவர்கள் விசை படகு மற்றும் நாட்டு படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். புறப்படும் முன்பாக அதிகாலையில் படகுகளுக்கு மாலை அணிவித்து, படையலிட்டு, பூஜைகள் செய்து வழிபட்டு விட்டு கிளம்பினர். 20 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க செல்வதால் மீனவர்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

Tags : fishermen ,sea ,Mookaiyur ,
× RELATED நெல்லை மீனவர்கள் 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை