×

மத்திய பிரதேசத்தில் பயங்கரம்; ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டில் துணிகர கொள்ளை: தூங்கிய மகனின் தலைமாட்டில் நின்ற திருடன்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி ரமேஷ் கார்க் வீட்டில் அதிகாலை மூன்றரை மணியளவில், ஆயுதங்களுடன் நுழைந்த முகமூடி அணிந்த மூன்று பேர் கொண்ட கும்பல், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது. வெறும் நான்கு நிமிடங்கள் பத்து விநாடிகளில் இந்தக் கொள்ளையை அரங்கேற்றிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.பாதுகாப்புக் காவலர் மற்றும் எச்சரிக்கை மணி வசதி இருந்தும், கொள்ளையர்கள் பிரதான வாயிலைத் தாண்டி, ஜன்னல் கம்பிகளை அறுத்துக்கொண்டு வீட்டிற்குள் எளிதாக நுழைந்துள்ளனர். ஆனால், இது பாதுகாப்புக் காவலரின் கவனத்திற்கே வரவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதி ரமேஷ் கார்க்கின் மகன் ரித்திக் உறங்கிக்கொண்டிருந்த அறையில்தான் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

கொள்ளையர்களில் இருவர் அறைக்குள் நுழைய, மற்றொருவர் வெளியே காவலுக்கு நின்றுள்ளார். அறைக்குள் நுழைந்த ஒருவன், அங்கிருந்த அலமாரியிலிருந்து பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டிருந்தபோது, மற்றொருவன் உறங்கிக் கொண்டிருந்த ரித்திக்கின் அருகே இரும்புக் கம்பியுடன் நின்றுள்ளான். ரித்திக் ஒருவேளை விழித்துக்கொண்டால், உடனடியாக அவரைத் தாக்கிச் சாய்ப்பதே அவனது நோக்கமாக இருந்துள்ளது.அச்சமயத்தில், வீட்டில் பாதுகாப்பு எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.

ஆனாலும் ரித்திக் எழுந்திருக்கவில்லை. அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாரா அல்லது கொள்ளையர்களுக்குப் பயந்து உறங்குவது போல நடித்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மற்றொரு அறையில் உறங்கிக்கொண்டிருந்த ரித்திக்கின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் இந்த கொள்ளைச் சம்பவம் குறித்துத் தெரியவரவில்லை.அதே நாளில், அப்பகுதியில் உள்ள பல வீடுகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளதால், இது திட்டமிட்டுச் செயல்படும் கொள்ளைக் கும்பலின் செயலாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி உமாகாந்த் சவுத்ரி தெரிவித்தார்.

Tags : Madhya Pradesh ,Bhopal ,Ramesh Garg ,Indore, Madhya Pradesh ,
× RELATED மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும்...