பெங்களூரு: சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகாசாமி கடந்தாண்டு ஜூன் 8ம் தேதி பெங்களூருவில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முன்னணி கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவு பேரில் நடிகர் தர்ஷன் பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். இவர்களில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 7 பேரை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 2024 டிசம்பரில் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து பெங்களூரு மாநகர போலீசார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.பி.பாத்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.
அதில், மக்கள் செல்வாக்கு, அதிகாரம் அல்லது சலுகைகள் எதுவாக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம். இந்த வழக்கில் இயந்திரதனமாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரபலமானவர்கள் என்பதால் ஜாமீனில் விடுதலை செய்ய முடியாது. குற்றவாளிகளை ஜாமீனில் விடுதலை செய்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளி இதற்கு முன் விசாரணை கைதியாக சிறையில் இருந்தபோது, சில சலுகைகள் அனுபவித்ததாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. ஜாமீன் ரத்தாகி மீண்டும் சிறைக்கு வரும் கைதிகளுக்கு எந்த சிறப்பு சலுகைகளையும் சிறை நிர்வாகம் வழங்கக்கூடாது. இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரையும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் வழங்கியுள்ளனர். ஜாமீன் உத்தரவு ரத்து செய்யப்பட்டதும், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
