×

புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு வார்டு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு: கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதியதாக ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறக்க காலை 9 மணியளவில் தயார் நிலையில் இருந்தது. தொடர்ந்து விழாவில் கலந்துகொள்ள கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், சார்பதிவாளர் நுழை வாயில் அருகே வந்தபோது கும்மிடிப்பூண்டி ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா செல்வம், துணைத் தலைவர் குணசேகரன், வார்டு உறுப்பினர்கள் லோகநாதன், சமதாஸ், அருள் உள்ளிட்ட 7 பேர், “திறப்பு விழாவுக்கு தங்களை முறையாக அழைக்கவில்லை” என கூறி கருப்பு சட்டை அணிந்து, கையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சிப்காட் போலீசார் 7 பேரையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து 12.30 மணியளவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். பின்னர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார், குத்துவிளக்கு ஏற்றி முதல் பத்திரப்பதிவை தொடங்கிவைத்தார். மேலும், இதனை வடிவமைத்த கட்டிட ஒப்பந்ததாரர் டி.சி.மகேந்திரனை பாராட்டினார். இதில், ஒன்றிய குழுத்தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார்,  மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர் கோவி.நாராயணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு, நகர அதிமுக செயலாளர் மு.க.சேகர், பாமக ஒன்றிய கவுன்சிலர் சங்கர், திமுக ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன், சார் பதிவாளர் (பொ) செந்தில்குமார், உதவியாளர் கலா, அலுவலக உதவியாளர் காந்திமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவின் முடிவில் கும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.எம்.ரவி, பெத்திக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவி ஜீவா செல்வம் உள்ளிட்டோர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரிடம் முறையாக ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என சரமாரியாக கேள்வி கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு எம்எல்ஏ விஜயகுமார், “இது அரசு விழா. யாரும் யாரையும் கூப்பிடவில்லை” என கூறி காரில் ஏறி சென்றார். இதனால் ஊராட்சி தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மாலை போலீசார் விடுவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Ward members ,Gummidipoondi ,
× RELATED சிப்காட்டிற்கு இடம் ஒதுக்கியதை...