×

தூத்துக்குடியில் 11 வழித்தடத்தில் மழைநீர் கடலுக்கு செல்லும் வகையில் கட்டமைப்பு

*மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 11 வழித்தடத்தில் மழைநீர் கடலுக்குச் செல்லும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக மேற்கு மண்டலத்தில் நடந்த குறைதீர் முகாமில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் நடந்தது. மண்டல தலைவர் அன்னலட்சுமி வரவேற்றார்.

முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் ‘‘ மாநகராட்சி பகுதிகளில் புதிதாக 964 சாலைப் பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக, கடந்த காலங்களில் 16, 17, 18 ஆகிய வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதையெல்லாம் மீட்கும் வகையில் பணிகள் மேற்கொண்டதால் கடந்த ஆண்டு பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

மாநகராட்சி பகுதியில் 206 பூங்காக்கள் அமையும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு பல்வேறு பகுதியில் இடத்திற்கேற்றாற்போல் சிறிய மற்றும் பெரிய பூங்காக்கள் அமைக்கப்பட்டு அதில் விளையாட்டு திடலும் உருவாக்கப்பட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்கள்.

அதற்கு நன்றி. தற்போது மழைக்காலம் துவங்க உள்ளது. அதனை முன்னிட்டு பக்கிள் ஓடை 6 கி.மீ. தூரம் தூர்வாரப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் 11 வழித்தடங்கள் மூலம் மழைநீர் கடலுக்கு செல்லும் வகையில் கட்டமைப்பை உருவாக்கி உள்ளோம்.

கேரிபேக் பிரச்னையை முற்றிலும் ஒழிப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இதற்கு முழுமையான தீர்வு கிடைக்கும். அனைவருடைய ஒத்துழைப்பும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அவசியம் தேவைப்படுகிறது’’ என்றார்.

நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் சரவணக்குமார், உதவி ஆணையாளர் பாலமுருகன், மாநகராட்சி நகர்நல அலுவலர் சரோஜா, நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் காந்திமதி, வருவாய் ஆய்வாளர் லெனின், சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, கவுன்சிலர்கள் சந்திரபோஸ், ராமர், பொன்னப்பன், கந்தசாமி, ஜான், விஜயலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், வட்ட பிரதிநிதிகள் துரை, ஜெபக்குமார் ரவி, பகுதி சபா உறுப்பினர் செல்வராஜ், மாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வின், மாநகர தொண்டரணி துணை அமைப்பாளர் மணி, சிபிஐ கிளைச்செயலாளர் பாலதண்டாயுதம், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி ஜேஸ்பர் ஞானமார்ட்டின், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாளரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thoothukudi ,Mayor Jagan Periyasamy ,Thoothukudi Corporation ,Thoothukudi Corporation… ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...