சென்னை: ஒருவரின் உடல் உறுப்பு தானம் 8 உயிர்களை காப்பாற்ற முடியும், இது மற்றவர்கள் வாழ்வதற்காக விட்டுச் செல்லக்கூடிய மிகச்சிறந்த மரபு என அப்போலோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்து, உறுப்புகள் கிடைக்காததால், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் இறக்கின்றனர். உறுப்பு கிடைக்காமல் ஒவ்வொரு நாளும், குறைந்தது 15 நோயாளிகள் வரை உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும், மாற்று அறுவை சிகிச்சைக்கான காத்திருப்பு பட்டியலில் ஒரு புதிய நபர் சேர்கிறார்.
இறுதி கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 5 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே உயிர் காக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான வாய்ப்பை பெறுகிறார்கள். இதயம், நுரையீரல் ஆகியவை பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நிலைமை இன்னும் மோசமானதாக உள்ளது. ஒரு நன்கொடையாளர் தங்கள் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், கணையம், திசுக்கள் ஆகியவற்றை தானமாக வழங்குவதன் மூலம் 8 உயிர்களைக் காப்பாற்ற முடியும். ஒருவர் தனது உறுப்புகளை தானமாக வழங்குவது, மற்றவர்கள் வாழ்வதற்காக தான் விட்டுச் செல்லக்கூடிய மிகச்சிறந்த மரபாக அமையும்.
சிங்கப்பூர், குரோஷியா, ஸ்பெயின், ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றில் உறுப்பு நன்கொடைக்கு “கருதப்பட்ட ஒப்புதல்” அல்லது “அனுமானத்தின் அடிப்படையிலான ஒப்புதல்” [Presumed Consent] என்ற ஒரு துணிச்சலான கொள்கை நடவடிக்கை பின்பற்றப்படுகிறது. “அனுமானிக்கப்பட்ட ஒப்புதல்” நடைமுறையின் கீழ், ஒவ்வொரு நபரும் தங்கள் முடிவை வெளிப்படையாக பதிவு செய்யாதபட்சத்தில், தங்கள் உறவினர்களின் முடிவைப் பொருட்படுத்தாமல், மரணத்திற்குப் பிறகு உறுப்பு நன்கொடையாளராக கருதப்படுகிறார்கள். இதனால் ஐரோப்பாவில், உறுப்பு நன்கொடைகள் அதிகரித்துள்ளதுடன் உறுப்புகளை தானதாக வழங்க விருப்பம் தெரிவிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது அங்கு உறுப்பு தான விகிதங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இது முன்மாதிரியாக இருந்து வழிநடத்த வேண்டிய நேரம். ஒரு உடல் உறுப்பு கிடைக்காமல் நம் மக்கள் இனி இறக்கக் கூடாது. அதை அனுமதிக்க முடியாது. அதைத் தடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
