×

அறிவிக்கப்பட்ட திட்ட கால அளவை விமர்சிக்காமல் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளை புரிந்துகொள்ள வேண்டும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: அறிவிக்கப்பட்ட திட்டங்களின் கால அளவை விமர்சிக்காமல் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளை புரிந்துகொள்ள வேண்டும், என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 175வது நாளாக அன்னம் தரும் அமுதக் கரங்கள் நிகழ்ச்சி கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம் காலனி மற்றும் வெற்றி நகர் வேணுகோபால் தெரு ஆகிய பகுதிகளில் நேற்று நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கினர்.

முன்னதாக 175வது நாள் அமுதக் கரங்கள் நிகழ்ச்சியை கொண்டாடும் விதமாக அமைச்சர்கள் இருவரும் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர், நிகழ்ச்சியில், பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி, மண்டல குழு தலைவர் சரிதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறுகையில், ‘சராசரியாக ஒரு நாளைக்கு 1200 பேர் என இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு உள்ளது’, என்றார்.

ஆட்சி ஏற்பட்டவுடன் ஒட்டுமொத்தமாக அனைத்து திட்டங்களையும் ஒரே நாளில் அறிவித்துவிட்டு செயல்படுத்த முடியாது. முதலில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள், அடுத்து மக்களுக்கு தேவைப்படுகின்ற இன்றியமையாத பல்வேறு தேவைகளை ஒன்றன் பின் ஒன்றாக நிதிநிலைக்கு ஏற்ப மக்களின் அதிக தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஒருபுறம் இருந்தாலும் அறிவிப்பில் இல்லாத மக்களின் தேவைகளுக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து இருக்கிறோம், அறிவிக்கப்பட்ட திட்டங்களின் கால அளவை விமர்சிக்காமல், அறிவிக்கப்படுகின்ற திட்டங்களால் மக்களுக்கு ஏற்படுகின்ற நன்மைகளைப் புரிந்து கொண்டு வாழ்த்துக்கள் இல்லை என்றாலும் வசைப்பாடுகள் அற்று, இதுபோன்ற திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், என்றார்.

Tags : Minister ,P.K. Sekarbabu ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,People's Chief Minister's Humanitarian Festival ,Chennai East District DMK.… ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...