×

சிஏஜி அறிக்கையில் தகவல்: 2022-23ல் இந்திய ரயில்வே வருவாய் 25 சதவீதம் உயர்வு; 6,484 கோடி ரூபாய் முறையற்ற செலவு; 5 கோடி ரூபாய் முடக்கப்பட்ட திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை

சென்னை: 2022-23ல் இந்திய ரயில்வே வருவாய் 25 சதவீதம் உயர்ந்துள்ளதாக சிஏஜி அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. 2022-23ம் நிதியாண்டில் இந்திய ரயில்வே பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளால் ரூ.2.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டியதாகவும், இது முந்தைய ஆண்டை விட 25.51 சதவீதம் அதிகம் எனவும் கணக்கு தணிக்கை மற்றும் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை, 2023 மார்ச் வரையிலான ரயில்வேயின் நிதி நிலையை தெரிவித்துள்ளது.

செலவுகளும் வருவாயும்: ரயில்வே அமைச்சகம் 2022-23ல் ரூ.4.42 லட்சம் கோடி செலவு செய்தது. இது முந்தைய ஆண்டை விட 11.34 சதவீதம் அதிகம். இதில் முதலீட்டுச் செலவு ரூ.2.04 லட்சம் கோடி (7.21 சதவீதம் உயர்வு) மற்றும் பராமரிப்புச் செலவு ரூ.2.38 லட்சம் கோடி (15.15 சதவீதம் உயர்வு) ஆகும். ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், ரயில் பெட்டிகளுக்கான குத்தகைக் கட்டணம் ஆகியவை மொத்த பணிச்செலவில் 72 சதவீதம் ஆக இருந்தது.பயணிகள், சரக்கு மற்றும் பிற சேவைகளில் இருந்து கிடைத்த வருவாய் ரூ.2.40 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதில் சரக்கு வருவாயில் 50.42 சதவீதம் நிலக்கரி போக்குவரத்தால் வந்தது. முந்தைய ஆண்டில் ரூ.15,024 கோடி பற்றாக்குறை இருந்த நிலையில், 2022-23ல் ரூ.2,517 கோடி நிகர மிகுதி கிடைத்தது. இயக்க விகிதம் 107.39 சதவீதத்தில் இருந்து 98.1 சதவீதம் ஆக குறைந்தது, இது நிதி மேலாண்மையில் முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

பயணிகள் சேவையில் இழப்பு: பயணிகள் சேவைகளில் இழப்பு குறைந்தாலும், ரூ.5,257 கோடி இழப்பு ஈடு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. அதே சமயம் இதை சரிகட்ட சரக்கு போக்குவரத்து லாபம் பயன்படுத்தப்பட்டது. மேலும், தேவையற்ற செலவு ரூ.6,484 கோடி செலவு 1,932 வழக்குகளில் ஏற்பட்டதாக சிஏஜி கண்டறிந்துள்ளது.

ரயில்வே பொதுத்துறை நிறுவனங்கள்: ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனங்களில் மார்ச் 2023 வரை ரூ.5.39 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய அரசு 80 சதவீத பங்கு மூலதனத்தை வழங்கியது. இந்த நிறுவனங்களின் லாபம் 2018-19ல் ரூ.6,146 கோடியாக இருந்தது, 2022-23ல் ரூ.12,057 கோடியாக உயர்ந்தது. 45 நிறுவனங்களில் 33 லாபம் ஈட்டினாலும், 7 நிறுவனங்கள் மட்டுமே அரசு விதிகளின்படி ஈவுத்தொகை அறிவித்தன.
திட்ட மேலாண்மையில் குறைகள்: வடமேற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே உள்ளிட்டவற்றில் நிதி மேலாண்மை குறைகளை சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது. 2019ல் முடக்கப்பட்ட ஒரு திட்டத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது. முடிக்கப்பட்டு ஆனால் சரியாக செய்யாத 4 திட்டங்களுக்கு ரூ.3,142 கோடி செலவிடப்பட்டு, மதிப்பீட்டை விட ரூ.744 கோடி (31 சதவீதம்) அதிகமாக செலவானது. 2011-12 முதல் 2016-17 வரை முடிந்த 7 திட்டங்களின் உற்பத்தித்திறன் சோதனைகள் இன்னும் நடத்தப்படவில்லை என்று தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CAG ,Indian Railways ,Chennai ,
× RELATED 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றும்...