சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த வரலாற்று தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன். அவருடைய ‘கூலி’ திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அனைத்து தரப்பினரையும் ஈர்க்கக்கூடிய மாஸ் எண்டர்டெயினராக ‘கூலி’ திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. ‘கூலி’ மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ், சத்யராஜ், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஆமிர் கான், சகோதரர் அனிருத், ஸ்ருதிஹாசன் உள்பட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தனது எக்ஸ் தள பதிவில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கூறுகையில், ‘சினிமாவில் அரை நூற்றாண்டு கால திறமையைக் குறிக்கும் வகையில், என் அன்பு நண்பர் ரஜினிகாந்த் இன்று சினிமாவில் 50 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார். நமது சூப்பர் ஸ்டாரை பாசத்துடனும் பாராட்டுடனும் கொண்டாடுகிறேன், மேலும் இந்த பொன் விழாவிற்கு ஏற்றவாறு ‘கூலி’ திரைப்படம் உலகளாவிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன். இதற்காக சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஆமிர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என அனைவருக்கும் வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார். நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், ஹிரித்திக் ரோஷன், நடிகை குஷ்பு, இசையமைப்பாளர் அனிருத் உள்பட திரையுலகை சேர்ந்த பலரும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
