×

விழுப்புரம் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல்!!

விழுப்புரம்: விழுப்புரம் தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த 11ம் வகுப்பு மாணவன் மோகன்ராஜ்(17) மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் திரு.வி.க வீதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்புப் படித்து வந்த மாணவன் மோகன்ராஜ் இன்று காலை 7 மணி அளவில் பள்ளிக்குச் சென்ற நிலையில் வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
உயிரிழந்த மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

மாணவன் மோகன்ராஜ் உணவருந்தாமல் பள்ளிக்குச் சென்றதும், மேலும் தாமதமாகச் சென்றதால் பத்து நிமிடம் பள்ளியில் நிற்கவைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் மூன்றாவது மாடியில் உள்ள வகுப்பறைக்கு அதிக சுமையுள்ள புத்தகப் பையுடன் ஏறிச் சென்றதன் விளைவாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என காவல்துறை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், மாணவர் மோகன்ராஜ் உயிரிழப்புக்கு மாரடைப்பு தான் காரணம் என மருத்துவர் தெரிவித்துள்ளார். மாரடைப்பு ஏற்பட்டு மாணவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மாரடைப்புக்கான அறிகுறி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தெரிய வரும் எனவும் மாணவனுக்கு 17 வயது என்பதால் முன்கூட்டியே அறிகுறி தெரிய வாய்ப்பில்லை எனவும் மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

Tags : Villupuram ,Mohanraj ,Saraswathi Matriculation Higher Secondary School ,Thiru.V.K. Road ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...