புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “வாக்கு திருட்டு ஒரு இடத்தில் மட்டுமல்ல, பல இடங்களில் நடந்துள்ளது. இது தேசிய அளவில் அமைப்பு ரீதியாகவும் நடந்துள்ளது. இது தேர்தல் ஆணையத்துக்கு தெரியும், எங்களுக்கும் தெரியும். ஆனால் இதை நிரூபிக்க முன்பு எங்களிடம் ஆதாரம் இல்லை. இப்போது ஆதாரங்கள் உள்ளன. ஒரு நபர், ஒரு வாக்கு என்பதே அரசியலமைப்பின் அடித்தளம். இதை நடைமுறைப்படுத்தும் கடமையில் இருந்து தேர்தல் ஆணையம் தவறி விட்டது. அதனால்தான் அரசியலமைப்பை பாதுகாக்கும் பணியை நாங்கள் செய்து வருகிறோம், தொடர்ந்து அதை செய்வோம்” என கூறினார்.
பின்னர், அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் கார்கே தலைமையில் நடந்தது. இதில், ராகுல் காந்தி பேசுகையில், கடந்த மக்களவை தேர்தலில் 48 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்று போனார்கள். அந்த தொகுதிகளிலும் வாக்கு திருட்டு நடந்துள்ளது. பெங்களூரு மத்திய தொகுதியை போல், போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார். இந்த வாக்கு மோசடி பற்றிய ஆதாரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
