×

மதம் மாறியவர்களுக்கும் இடஒதுக்கீடு கோரி பட்டியலின, பழங்குடி பணிக்குழு சார்பில் துக்கநாள் அனுசரிப்பு கூட்டம்

சாத்தான்குளம் : தென் மண்டல பட்டியலினத்தார், பழங்குடியினர் பணிக்குழு சார்பில் ஆகஸ்ட் 10 துக்க நாள் அனுசரிப்பு கூட்டம் சாத்தான்குளம் அருகே கீழ அம்பலச்சேரியில் நடந்தது.கடந்த 1950ம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் நாள் அப்போதைய ஜனாதிபதி, மதம் மாறிய தலித் மக்களுக்கு எஸ்சி இட ஒதுக்கீடு கிடையாது என கையெழுத்திட்டார்.

கிறிஸ்தவ, சீக்கிய, பௌத்த, முஸ்லிம் மதத்தை தழுவிய தலித் மக்களுக்கு எஸ்.சி.கான எந்தவித இட ஒதுக்கீடு சலுகைகள் கிடையாது என அறிவித்த நாள் முதல் தொடர்ந்து 75 ஆண்டுகளாக பட்டியலின் கிறிஸ்தவ மக்கள் கருப்பு நாளாக அனுசரித்து போராடி வருகின்றனர்.

அதன்படி ஆகஸ்ட் 10ம் நாளான நேற்று முன்தினம் மாலை துக்க நாள் அனுசரிப்பு கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கீழ அம்பலச்சேரியில் நடந்தது. கூட்டத்திற்கு அருள்தந்தை ஜெரால்டு ரவி தலைமை வகித்தார்.

உரிமை வாழ்வு பணிக்குழு செயலாளர் அருள்தந்தை ராபின் ஸ்டான்லி முன்னிலை வகித்தார். கண்காணிப்பு குழு உறுப்பினர் சகாய அரசு வரவேற்றார். களப்பணியாளர் பீட்டர் இசக்கிமுத்து அறிமுக உரையாற்றினார்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் கந்தன், தூத்துக்குடி மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர் தமிழ் குட்டி, புனித சவேரியார் கல்லூரி பேராசிரியர் தமிழினியன், அம்பலசேரி வழக்கறிஞர் ஈஸ்டர் கமல் ஆகியோர் கருத்துரை வழங்கி பேசினர்.

இதில் தலித் கிறிஸ்தவர்களை தலித் எஸ்சி பட்டியலில் சேர்த்திடக்கோரி கோஷங்கள் எழுப்பினர். ஆலய நிர்வாகி சிலுவை முத்து, மற்றும் ஜெயக்குமார், சுந்தர்ராஜ், ஆசிரியர் ஜேசுபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கண்காணிப்பு குழு உறுப்பினர் செங்கோல் மணி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் கீழ அம்பலசேரி  இறை மக்கள் செய்திருந்தனர்.

Tags : Scheduled Castes and Scheduled Tribes Working Group ,Sathankulam ,Southern Zone Scheduled Castes and Scheduled Tribes Working Group ,Keezh Ambalacherry ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...