×

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தி வந்த 18 மூட்டை குட்கா பறிமுதல்‌: வாலிபர் கைது; சினிமா பாணியில் போலீசார் விரட்டி பிடித்தனர்

பூந்தமல்லி: பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தி வந்த 18 மூட்டை குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். சினிமா பாணியில் போலீசார் விரட்டி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சந்திரமௌலி தலைமையில் உதவி ஆய்வாளர் முருகையா, தலைமை காவலர்கள் ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி, காவலர் கோபிநாத் உள்ளிட்ட போலீசார் இன்று காலை பூந்தமல்லி அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்‌. அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு கார் வேகமாக வந்தது.

அந்த காரை போலீசார் மடக்க முயன்றபோது நிற்காமல் வேகமாக சென்றது. உடனே போக்குவரத்து போலீசார், சினிமா பாணியில் அந்த காரை விரட்டினர். சுமார் 2 கிமீ தூரம் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட நபரை பூந்தமல்லி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அவர், அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (38) என்பதும், பெங்களூரில் இருந்து காரில் குட்கா கடத்தி சென்னைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.

மேலும், ஆவடியில் உள்ள ஒரு கடையில் குட்காவை விநியோகம் செய்துவிட்டு அனகாபுத்தூரில் உள்ள ஒரு கடையில் சப்ளை செய்ய இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கார் மற்றும் 18 மூட்டை குட்காவை போலீசார் பறிமுதல் செய்து ராஜேஷை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை ஆவடி கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி பார்வையிட்டு, குட்காவை பிடித்த போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

Tags : Kudka ,Bangalore ,Chennai ,Poonthamalli ,Punthamalli ,Traffic Inspector ,Chandramauli ,
× RELATED கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1.37 லட்சம்...