மேலூர், ஆக. 11: ஆசிய கேரம் போட்டியில் தங்கம் வென்ற மேலூர் கல்லூரி மாணவருக்கு, பல்வேறு அமைப்பினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலூர் காந்தி நகரை சேர்ந்தவர் லாரி டிரைவர் சதாசிவம். இவரது மனைவி கவிதா. இவர்களின் மகன் சரண்குமார்(20) கோயம்புத்தூரில் உள்ள தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேபாளத்தில் உள்ள போக்ராவில் நடைபெற்ற ஆசிய அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்றார். இதில் சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, பூடான், நேபாளம் ஆகிய நாடுகளின் வீரர்களும் கலந்துகொண்டனர்.
இதில் கலப்பு இரட்டையர் சாம்பியன்ஷிப் பிரிவில் இந்திய அணி சார்பாக மேலூர் சரண்குமார் புதுக்கோட்டையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் நேபாளத்தை வென்று தங்கப்பதக்கம் வென்றனர். இதையடுத்து மேலூர் திரும்பிய சரண்குமாருக்கு மேளதாளத்துடன் வாண வேடிக்கை முழங்க நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மேலூர் லயன்ஸ் கிளப் சங்கத் தலைவர் கண்ணன், செயலாளர் ஞானசுந்தர பாண்டியன், பொருளாளர் நவநீத கிருஷ்ணன், டைமண்ட் ஜூப்ளி கிளப் தலைவர் மணிவாசகம், தாலுகா ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
