பவானி, ஆக. 11: அம்மாபேட்டையில் பேராசிரியர் வீட்டில் பணம், பித்தளை பாத்திரங்கள் திருட்டுபோனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ளது அம்மாபேட்டை. இங்குள்ள செலம்பனூரைச் சேர்ந்தவர் யுவனேஷ்வரன் (53). ஈரோடு தனியார் இஞ்சினீயரிங் கல்லூரி பேராசிரியர். குடும்பத்துடன் வெளியூர் சென்ற இவர் கடந்த 8ம் தேதி வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது அவரது சகோதரர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக போனில் தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம், ரூ.30 ஆயிரம் பித்தளை பாத்திரங்கள் திருட்டு போயிருந்தன. தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் காவேரி யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
